அத்தியாவசிய தேவைகள் சார்ந்த நிறுவனங்கள் இணையதளம் மூலமாக அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளலாம் - மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு
அத்தியாவசிய தேவைகள் சார்ந்த நிறுவனங்களுக்கான அனுமதி சீட்டை இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கான நிறுவனங்களை தவிர்த்து பிற நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்கான நிறுவனங்கள் செயல்பட ஏதுவாக அவற்றின் பணியாளர்கள் மற்றும் வாகனங்கள் போக்குவரத்துக்காக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுவரை சென்னை மாநகராட்சியில் 652 நிறுவனங்களுக்கு மாநகராட்சி சார்பில் அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களின் நலன் கருதி அனுமதி சீட்டுகளை பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளம் வழியே பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்
அதன்படி http://cov-id19.ch-e-n-n-a-i-c-o-r-p-o-r-at-i-on.gov.in என்ற இணையதளத்தின் வழியே சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி) பதிவு சான்றிதழ், பணியாளர் அடையாள அட்டை, வாகன பதிவு சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட அலுவலரின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் ஆகிய ஆவணங்களுடன் காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
எனவே நிறுவனங்கள் அனுமதி சீட்டினை பெற மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வருவதை தவிர்த்து இணையதளத்திலேயே விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதியுள்ள விண்ணப்பங்களுக்கு இணையதளம் மூலமாகவே அனுமதி சீட்டு வழங்கப்படும்.
‘கியூஆர்’ கோடு கொண்ட அனுமதி சீட்டுகளை விண்ணப்பதாரர்கள் மேற்படி இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story