காரைக்குடியில் நிவாரண பொருட்கள் வாங்க திரண்டவர்களால் பரபரப்பு - போலீசாரிடம் வாக்குவாதம்
காரைக்குடியில் நிவாரண பொருட்கள் வாங்க திரண்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கலைந்து போகும்படி கூறியதால் அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
காரைக்குடி,
சிவகங்கை மாவட்டத்தில் மக்களுக்கு நிவாரண பொருட்கள் அரசு சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பிலும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று புதுவயல், சாக்கோட்டை பகுதியை சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர்கள் சார்பில் 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் ஏழை, எளிய மக்கள் மற்றும் அரிசி ஆலை தொழிலாளர்கள் குடும்பத்திற்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து காரைக்குடி, சாக்கோட்டை, கல்லூர், புதுவயல் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் காரைக்குடியில் ஒரு மேல்நிலைப்பள்ளி முன்பு குவிந்தனர். நிவாரண பொருட்களை வாங்குவதற்காக அதிகாலை முதலே மக்கள் குவியத் தொடங்கியதால் அவர்களை போலீசார் நீண்ட வரிசையில் நிற்கும்படி அறிவுறுத்தினர். நேரம் செல்லச்செல்ல இந்த கூட்டம் அதிகரித்தது.
மேலும் நீண்ட வரிசையில் நின்றவர்கள் போதிய சமூக இடைவெளி இல்லாமல் நின்றதால் என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் திகைத்தனர்.
இதையடுத்து மதியம் 12.30 மணிக்கு அங்கு வந்த காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக மைக் மூலம் பொதுமக்களை அங்கிருந்து கலைந்து போக அறிவுறுத்தினார். வீட்டிற்கே வந்து நிவாரண பொருட்கள் வழங்குவதாகவும் தெரிவித்தார்.
அப்போது, “நாங்கள் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் பல மணி நேரமாக வரிசையில் நிற்கிறோம், இந்த நிலையில் கலைந்து போகச்சொன்னால் எப்படி?” என துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்து அங்கு கூட்டமாக நின்றவர்களை கலைந்து போக செய்தனர்.
பின்னர் ஆங்காங்கே நின்ற பொதுமக்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தின் அடியில் அமர வைக்கப்பட்டனர். பின்னர் சம்பந்தப்பட்ட நபர்கள் வந்தவுடன் அந்த பள்ளி வளாகத்திலேயே மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன.
காரைக்குடியில் நேற்று காலை ஆயிரக்கணக்கானோர் நிவாரண பொருட்கள் வாங்க திரண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story