மதுரை ஐகோர்ட்டில் நாளை முதல் அவசர வழக்குகள் விசாரணை
மதுரை ஐகோர்ட்டில் நாளை முதல் அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை,
கடந்த ஒரு மாதமாக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெறவில்லை. மிக அவசர வழக்குகள் சிலவற்றை மட்டும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதிகள் விசாரித்தனர்.
இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டில் வருகிற 20-ந்தேதி (அதாவது நாளை) முதல் அவசர வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று மதுரை ஐகோர்ட்டு பதிவாளர் (நீதித்துறை) தமிழ்செல்வி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது அறிக்கையில் கூறியிருந்ததாவது:-
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஐகோர்ட்டில் வழக்குகள் விசாரணை நடைபெறவில்லை. தற்போது தலைமை நீதிபதியின் அறிவுறுத்தலின்படி, வருகிற 20-ந்தேதி முதல் அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் அவசரமான மனுக்கள், ரிட் மனுக்கள், ரிட் அப்பீல் மனுக்கள், ஆட்கொணர்வு மனுக்கள் விசாரிக்கப்படும்.
அதன்பின் போலீசாருக்கு உத்தரவிடக்கோரும் அவசரம் மற்றும் கிரிமினல் மனுக்களை நீதிபதி பி.என்.பிரகாஷ் தனியாக விசாரிக்கிறார்.
ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களை நீதிபதி வேல்முருகன் விசாரிக்கிறார். அவசர மனுக்கள் மற்றும் அனைத்து ரிட் மனுக்களை நீதிபதி கார்த்திகேயன் விசாரிக்கிறார்.அதேபோல மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதி கிருஷ்ணவள்ளி முன்பு விசாரணைக்கு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story