திருக்காட்டுப்பள்ளி பகுதியில் கோடை நெல் சாகுபடி பணிகள் தீவிரம்


திருக்காட்டுப்பள்ளி பகுதியில் கோடை நெல் சாகுபடி பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 19 April 2020 5:17 AM IST (Updated: 19 April 2020 5:17 AM IST)
t-max-icont-min-icon

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் கோடை நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருக்காட்டுப்பள்ளி,

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் கோடை நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நெல்சாகுபடி

மேட்டூர் அணையில் போதுமான அளவு தண்ணீர் இருந்தால் தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுடி நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்க இயலாத நிலையில் ஒரு போக நெல் சாகுபடி மட்டுமே நடந்தது.

இந்தநிலையில் காவிரி டெல்டா பகுதிகளில் ஆழ்துளை கிணற்று தண்ணீரை கொண்டு குறுவை, தாளடி, மற்றும் கோடை நெல் சாகுபடியையும் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

நடவு பணி தீவிரம்

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் காவிரி கரையோரத்தில் உள்ள கோவிலடி, திருச்சினம்பூண்டி, பூண்டி, பவனமங்கலம், விஷ்ணம்பேட்டை, கூத்தூர், திருக்காட்டுப்பள்ளி, ஒன்பத்துவேலி, இளங்காடு ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணறு வசதி உள்ளவர்கள் கோடை நெல் சாகுபடி பணிகள் மேற்கொள்வது வழக்கம்.

இந்த ஆண்டும் வழக்கம்போல் கோடை நெல் சாகுபடிக்காக ஏ.எஸ்.டி. 16 நெல் விதைகளை கொண்டு நாற்றங்கால் தயார் செய்திருந்த விவசாயிகள் தற்போது நடவு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நிலத்தடி நீர்மட்டம்

ஊரடங்கு அமலில் இருந்த போதிலும் விவசாய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் உழவு செய்தல், வயல்களை சமன் செய்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டனர். பின்னர் நாற்றங்காலில் நாற்றுக்களை பறிக்கும் பணிகளில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கடந்த ஆண்டில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. விவசாய பணிகளுக்காக தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் தற்போது கோடை நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் நாற்று பறிக்கும் பணி, நடும் பணி ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story