கடலூர் அருகே, தேர்தல் முன்விரோத தகராறில் தொழிலாளி அடித்து கொலை


கடலூர் அருகே, தேர்தல் முன்விரோத தகராறில் தொழிலாளி அடித்து கொலை
x
தினத்தந்தி 18 April 2020 11:00 PM GMT (Updated: 19 April 2020 12:23 AM GMT)

கடலூர் அருகே தேர்தல் முன்விரோத தகராறில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார்.

நெல்லிக்குப்பம்,

கடலூர் அடுத்த தூக்கணாம்பாக்கம் அருகே உள்ள பள்ளிப்பட்டு காலனியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 48). இவர் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பள்ளிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராமச்சந்திரன் என்பவருக்கு ஆதரவாக வேலை செய்தார். ராமச்சந்திரனுக்கு எதிராக ரவி என்பவர் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால் ராமச்சந்திரன் ஆதரவாளர் ஜனார்த்தனனுக்கும், ரவியின் ஆதரவாளர் குமார் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி ஜனார்த்தனன், இவருடைய தரப்பை சேர்ந்த கூலி தொழிலாளி கமலக்கண்ணன்(40) ஆகிய இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த குமார் தரப்பினருக்கும், ஜனார்த்தனன் தரப்பினருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் இரும்பு பைப் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில் இரு தரப்பை சேர்ந்த ஜனார்த்தனன், கமலக்கண்ணன், சிவா, ஜெயசீலன் உள்பட 7 பேருக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் கமலக்கண்ணன் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின்பேரில் குமார், மணியரசன், விஜயன், வெங்கடேசன், கிருஷ்ணராஜ், ஜெயசீலன், கோபு உள்பட 20 பேர் மீது தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணியரசன்(27), விஜயன்(27), குமார் ஆகியோரை கைது செய்தனர். இதற்கிடையே புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கமலக்கண்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 17 பேரை கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் மாயகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தூக்கணாம்பாக்கம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தூக்கணாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த வெங்கடேசன், சிலம்பரசன், பாரதிதாசன், அரவிந்த், சிவராமன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

Next Story