எலுமிச்சை பழம் விலை வீழ்ச்சி குமரியில் கிலோ ரூ.50-க்கு விற்பனை


எலுமிச்சை பழம் விலை வீழ்ச்சி குமரியில் கிலோ ரூ.50-க்கு விற்பனை
x
தினத்தந்தி 19 April 2020 6:10 AM IST (Updated: 19 April 2020 6:10 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் கோடைக்கு இதமான எலுமிச்சை பழம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ ரூ.50-க்கு விற்பனையாகி வருகிறது.

பத்மநாபபுரம், 

குமரியில் கோடைக்கு இதமான எலுமிச்சை பழம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ ரூ.50-க்கு விற்பனையாகி வருகிறது.

எலுமிச்சை பழம்

கோடைவெயில் சுட்டெரிக்கும் போது இளநீர், குளிர்பானம், நுங்கு, எலுமிச்சை பழ ஜூஸ் போன்றவற்றை மக்கள் விரும்பி குடிப்பார்கள். அதிலும் எலுமிச்சை பழ ஜூஸ் பல சத்துக்கள் நிறைந்தது. மேலும் உடலுக்கு இதமாகவும் இருக்கும். உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

ஊரடங்கு காரணமாக குமரியில் எலுமிச்சை பழம் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது, பழங்கள் வரத்து அதிகமாக உள்ளது. அதே சமயத்தில், கடைகள் திறக்கப்படாததால் எலுமிச்சை பழத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக குமரி மாவட்ட மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என தங்களுடைய வேதனையையும் வெளிப்படுத்தினர்.

நிவாரணம்

இது குறித்து தக்கலை பேட்டை சந்தையை சேர்ந்த மொத்த வியாபாரி சந்தனராஜ் (வயது 58) என்பவர் கூறுகையில், தென்காசி மாவட்டம் புளியங்குடி மற்றும் சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குமரிக்கு எலுமிச்சை பழம் அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இதே கோடை காலத்தில் 1 கிலோ எலுமிச்சை பழம் ரூ.100 முதல் ரூ.130 வரை விலை போனது.

ஆனால், தற்போது 1 கிலோ ரூ.50 முதல் ரூ.70 வரை விற்கப்படுகிறது. இதனால் வியாபாரிகள், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு எலுமிச்சை பழ விவசாயிகள், வியாபாரிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கூறினார்.


Next Story