ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் நாகர்கோவிலுக்கு 2,600 டன் அரிசி மூடைகள் வந்தன ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரம்
ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் நாகர்கோவிலுக்கு 2,600 டன் அரிசி மூடைகள் வந்தன. அவற்றை ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது.
நாகர்கோவில்,
ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் நாகர்கோவிலுக்கு 2,600 டன் அரிசி மூடைகள் வந்தன. அவற்றை ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது.
ரேஷன் பொருட்கள்
நாடு முழுவதும் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு சிரமப்படக் கூடாது என்பதற்காக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1000, அரிசி, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதே போல குமரி மாவட்டத்தில் 5 லட்சத்து 42 ஆயிரத்து 986 ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்ட நிலையில் ரேஷன் பொருட்கள் இன்னும் முழுமையாக கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக புழுங்கல் அரிசி பற்றாக்குறையாக இருப்பதாக தெரிகிறது.
2,600 டன் அரிசி
இதற்கிடையே ஊரடங்கு கடந்த 14-ந் தேதியுடன் நிறைவடையவிருந்த நிலையில் மே 3-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. எனவே மே மாதத்துக்கான ரேஷன் பொருட்களையும் மக்கள் வாங்கி கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. குமரி மாவட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரேஷன் பொருட்களே இன்னும் முழுமையாக வினியோகம் செய்யப்படாமல் இருக்கும் நிலையில் மே மாதத்துக்கான ரேஷன் பொருட்களை கேட்டு ரேஷன் கடைகளுக்கு மக்கள் செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது.
இந்த நிலையில் குமரி மாவட்ட பொது வினியோக திட்டத்துக்காக ஆந்திராவில் இருந்து 2,600 டன் புழுங்கல் அரிசி நேற்று முன்தினம் நாகர்கோவிலுக்கு வந்தது. ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயில் மூலமாக இந்த அரிசி மூடைகள் நாகர்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. இதைத் தொடர்ந்து ரெயிலில் இருந்து அரிசி மூடைகளை இறக்கி பள்ளிவிளையில் உள்ள அரசு குடோனுக்கு கொண்டு செல்லும் பணி நேற்று விறுவிறுப்பாக நடந்தது.
தீவிரம்
இந்த பணியில் ஏராளமான ஊழியர்கள் ஈடுபட்டனர். சரக்கு ரெயிலில் இருந்து அரிசி மூடைகளை லாரியில் ஏற்றி குடோனுக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கு அரிசி மூடைகள் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டன. இந்த ரேஷன் அரிசி மூடைகளை அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எப்படியும் இன்னும் ஓரிரு நாட்களில் அரிசி மூடைகள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குமரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் ஆந்திராவில் இருந்து 2,600 டன் அரிசி வந்திருப்பதால் தட்டுப்பாடு தீரும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story