கல்வராயன்மலையில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்த 7 பேர் கைது
கல்வராயன் மலையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு கள்ளச்சாராயம் கடத்தி வந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் காவல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராமநாதன், மகேஷ் ஆகியோர் தலைமையில் கல்வராயன்மலையில் கள்ளச்சாராய வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். இதில் 50 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை அழித்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சிய பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், செல்வநாயகம் மற்றும் போலீசார் 3 பிரிவுகளாக பிரிந்து கள்ளக்குறிச்சி அம்மன் நகர், பெருவங்கூர், மோகூர் ஆகிய பகுதிகளில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது கல்வராயன்மலையில் இருந்து அந்த வழியாக 3 இருசக்கர வாகனங்களில் சாராயம் கடத்தி வந்த, கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராமன் மகன்கள் வேல்முருகன் (வயது 26), ராகுல்(24), பொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுனன் அருண்குமார்(20), கல்வராயன்மலை கவ்வியம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன்(36), கச்சிராயப்பாளையத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் சின்னதுரை(30), செம்படாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் ரகுபதி(29),பெருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சன்(47) ஆகிய ஏழு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே கல்வராயன் மலையடிவார கிராமங்களில் கள்ளச்சாராயத்துக்கு தட்டுப்பாடு நிலவுவதால் விலை பலமடங்கு உயர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது. ஊரடங்குக்கு முன்பு 800 மி.லி. சாராயம் 50 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் இப்போது 1000 ரூபாய்க்கு விற்பனையாவதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story