தெலுங்கானாவில் இருந்து லாரி மூலம் நாமக்கல்லுக்கு வந்த என்ஜினீயர்கள் - போலீசார் மார்த்தாண்டம் அனுப்பி வைத்தனர்
ஊரடங்கையொட்டி பஸ், ரெயில்கள் ஓடாததால் தெலுங்கானாவில் இருந்து லாரி மூலம் நாமக்கல்லுக்கு வந்த என்ஜினீயர்கள் 2 பேரை போலீசார், முட்டை லாரியில் மார்த்தாண்டம் அனுப்பி வைத்தனர்.
நாமக்கல்,
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர்கள் ஹாஜி, மெர்லின்ராஜ். இருவரும் என்ஜினீயர்கள். இவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேளாண்மை பயிற்சிக்காக தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சென்றனர். அங்கு தங்கி பயிற்சி எடுத்தனர்.
இதற்கிடையே கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அவர்கள் பயிற்சி மேற்கொண்ட நிறுவனத்திலேயே தங்கி இருந்து வந்தனர். தற்போது மே மாதம் 3-ந் தேதி வரை ஊரடங்கை மத்திய அரசு நீட்டிப்பு செய்ததால் சொந்த ஊருக்கு புறப்பட முடிவு செய்தனர்.
ஆனால் பஸ், ரெயில் ஓடாததால் சுமார் 1,500 கி.மீட்டர் தூரம் கொண்ட மார்த்தாண்டத்திற்கு நடந்தோ அல்லது லாரிகளில் ஏறியோ செல்ல முடிவு செய்தனர். அதன்படி சுமார் 2 கி.மீட்டர் நடந்து வந்த அவர்கள் நாமக்கல்லை சேர்ந்த லாரி ஒன்றில் ஏறி நேற்று நாமக்கல் வந்து சேர்ந்தனர்.
இங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தினார். பின்னர் அவர்கள் இருவரையும் முட்டை லாரி ஒன்றில் நாமக்கல்லில் இருந்து மார்த்தாண்டத்திற்கு அனுப்பி வைத்தார்.
Related Tags :
Next Story