விளைச்சல் இருந்தும் வாங்க ஆள் இல்லை: ஒரு கிலோ கேரட் ரூ.7-க்கு விற்பனை - விவசாயிகள் வேதனை


விளைச்சல் இருந்தும் வாங்க ஆள் இல்லை: ஒரு கிலோ கேரட் ரூ.7-க்கு விற்பனை - விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 19 April 2020 3:45 AM IST (Updated: 19 April 2020 9:31 AM IST)
t-max-icont-min-icon

விளைச்சல் இருந்தும் வாங்க ஆள் இல்லாததால் ஓசூர் பகுதியில் ஒரு கிலோ கேரட் ரூ.7-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், உத்தனப்பள்ளி, கெலவரப்பள்ளி, பேரிகை, தேன்கனிக்கோட்டை, தளி, சூளகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் கேரட் சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வேலைக்கு ஆட்கள் வருவதில்லை. இதனால் கேரட்டை விவசாயிகள் தங்களின் உறவினர்கள் ஒத்துழைப்புடன் அறுவடை செய்தும் வாங்கி செல்ல ஆட்கள் வரவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் கேரட்டை ஓசூர் உழவர் சந்தை, கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி, சந்தாபுரம் வரையில் கொண்டு சென்று கொடுத்து பணத்தை வாங்கி வருகிறார்கள்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கொரோனா ஊரடங்கிற்கு முன்பு 50 கிலோ கேரட் மூட்டை ரூ.2,500-க்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ கேரட் ரூ.50 முதல் 70 வரையில் மொத்த விற்பனையிலும், ரூ.60 முதல் 100 வரையில் சில்லரையாக விற்பனை செய்யப்பட்டது. கர்நாடக மாநில வியாபாரிகள் கேரட்டை அதிக அளவில் வாங்கி சென்று வந்தனர்.

தற்போது கேரட்டை வாங்க ஆட்கள் இல்லாததால் 50 கிலோ மூட்டை ரூ.350-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ கேரட் ரூ.7-க்கு விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு மிகவும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் ரூ.1 லட்சம் வரையில் பயிரிட்டு ரூ.50 ஆயிரம் கூட கிடைப்பதில்லை. முன்பு ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் செலவிட்டு கேரட் பயிரிட்டு இருந்தால் அதிக பட்சமாக ரூ.3 லட்சம் வரை கிடைத்தது. கொரோனாவால் எங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story