பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி பகுதிகளில், 2 ஆயிரம் ஏக்கரில் சேதமடையும் வாழைத்தார்கள் - நஷ்டத்தில் தள்ளப்படும் விவசாயிகள்
பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி பகுதிகளில் கொள்முதல் நடக்காததால் 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழைத் தார்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாழை சாகுபடி செய்த விவசாயிகள் நஷ்டமடையும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பொம்மிடி,
தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் ஒவ்வொரு ஆண்டும் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தலா 1 ஏக்கர் முதல் 3 ஏக்கர் வரையிலான நிலப்பரப்பில் வாழை சாகுபடி செய்து உள்ளனர். செவ்வாழை, ரஸ்தாளி, தேன்வாழை, பூவாழை, ஏலக்கி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வாழை ரகங்கள் பயிரிடப்பட்டு உள்ளன. வாழை அறுவடை காலம் தற்போது தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளதால் வாழைத்தார்களை கொள்முதல் செய்யும் மண்டிகள், கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் வாழை கொள்முதல் பாதிக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் வாழைத்தார்களை அறுவடை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடையும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த வாழை தார்களை வெட்டி விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் பழங்கள் அழுகியும், வெயிலில் காய்ந்தும் வீணாகி வருகிறது.
இதுதொடர்பாக வாழை விவசாயிகள் கூறியதாவது:-
இந்த பகுதியில் ஒரு ஏக்கர் வாழை சாகுபடி செய்ய ரகத்திற்கு ஏற்ப ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. செவ்வாழை, தேன்வாழை ஆகியவை சுமார் 1½ ஆண்டுகால பராமரிப்பு தேவைப்படும் ரகங்களாகும். கடந்த ஆண்டு இந்த பகுதியில் அறுவடை காலத்தில் சூறைக்காற்று வீசியதால் வாழை சாகுபடி செய்த விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளானோம். அதன்பின் அரசு நிவாரணம் வழங்க கணக்கெடுப்பு செய்யப்பட்டது. ஆனால் நிவாரண உதவிகள் எங்களுக்கு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவால் இந்த ஆண்டும் வாழை கொள்முதல் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கடும்வெயில் காரணமாக அறுவடைக்கு தயாராக உள்ள வாழை மரங்கள் குலையுடன் முறிந்து விழுகின்றன. சுமார் ஒரு ஆண்டாக நாங்கள் செய்த முதலீடு மற்றும் உழைப்பு முழுமையாக வீணாகி மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே காய்கறிகளை கொள்முதல் செய்வதுபோல் வாழைத்தார்களையும் இந்த பகுதிகளில் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அரசு துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை மதிப்பீடு செய்து சாகுபடி செய்துள்ள ரகத்திற்கு ஏற்ப இழப்பீட்டுதொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story