தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சாராய வழக்கில் 24 பேர் கைது
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சாராய வழக்கில் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஏரியூர்,
தர்மபுரி மாவட்டம் அரூர், கோட்டப்பட்டி, கோபிநாதம்பட்டி, பள்ளிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாராயம் காய்ச்சி, விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து அரூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், முரளி, ரவிகுமார் மற்றும் அந்தந்த பகுதி போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது மாவேரிப்பட்டியை சேர்ந்த சிவகுமார் (வயது40), செல்வம் (37), குடுமியாம்பட்டி அருண்குமார் (39), அரூர் கார்த்தி, திருப்பதி, நம்மங்காடு செல்வராணி (31) உள்ளிட்ட 17 பேர் சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் மற்றும் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 வாகனங்கள், 115 லிட்டர் சாராயம், 400 லிட்டர் ஊறல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
ஏரியூர் அருகே உள்ள பெரும்பாலை பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக பெரும்பாலை போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீசார் புதுப்பட்டி மலைப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அதேபகுதியை சேர்ந்த தமிழரசு (36), பெரியண்ணன் (35), சந்திரகேஸ் (26) ஆகிய 3 பேரும் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே செம்பரசனபள்ளி பக்கமுள்ள தொட்டேபள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் ரமேஷ்(35), திருமலை(34). இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக சூளகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையில் போலீசார் அங்கு சென்று 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் தயாரிக்க வைத்திருந்த பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
அஞ்செட்டி அருகே பாண்டுரங்கன்தொட்டி கிராமத்தில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அஞ்செட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் வனப்பகுதியில் சோதனை செய்தனர். அங்கு சாராயம் காய்ச்சியதாக அதேபகுதியை சேர்ந்த முனியன், சக்திவேல் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story