கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் பணிபுரியும் போலீசாருக்கு பாதுகாப்பு கவச உடைகள் வழங்க வேண்டும் - வடக்கு மண்டல ஐ.ஜி. உத்தரவு


கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் பணிபுரியும் போலீசாருக்கு பாதுகாப்பு கவச உடைகள் வழங்க வேண்டும் - வடக்கு மண்டல ஐ.ஜி. உத்தரவு
x
தினத்தந்தி 19 April 2020 12:21 PM IST (Updated: 19 April 2020 12:21 PM IST)
t-max-icont-min-icon

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் பணிபுரியும் போலீசாருக்கு பாதுகாப்பு கவச உடைகள் வழங்க வேண்டும் என்று வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் உத்தரவிட்டார்.

வாணியம்பாடி,

தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆம்பூர் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நகரில் பெரும்பாலான தெருக்கள் மூடப்பட்டு போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பு பணியை ஆய்வு செய்ய வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் நேற்று ஆம்பூருக்கு வந்தார். வர்த்தக மையத்தில் அமைந்துள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறைக்கு சென்று ஆய்வு செய்த பிறகு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து ஆம்பூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியருகே கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் தெருக்கள் மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு பணியில் இருந்த போலீசார் பாதுகாப்பு கவச உடை அணியாமல் இருப்பதை பார்த்த அவர், போலீசாருக்கு உடனடியாக கொரோனா பாதுகாப்பு கவச உடை, முகக்கவசம், கையுறை ஆகியவற்றை உடனடியாக வழங்க உத்தரவிட்டார்.

ஆய்வின்போது திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம், தாசில்தார் செண்பகவல்லி, நகராட்சி ஆணையாளர் த.சவுந்தரராஜன், மாதனூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராமு, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், நகராட்சி துப்புரவு அலுவலர் பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு குறித்து காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி, நாகராஜன் ஆய்வு செய்தார். வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்டார். பின்னர் அங்கு வந்திருந்த தன்னார்வலர்களிடம் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் குறைகள் இருக்கிறதா என்பதை கேட்டார்.

தொடர்ந்து வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதிக்கு சென்ற ஐ.ஜி. நாகராஜன் அங்கு வாணியம்பாடி- ஆலங்காயம் சாலைக்கு போடப்பட்டுள்ள தடுப்பு இடங்களை பார்வையிட்டார்.

அப்போது அவர் 50 வயதுக்கு மேற்பட்டவர்களை கொரோனா காவல் தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டாம். ரத்த அழுத்தம், சர்க்கரை குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது உதவி கலெக்டர் காயத்ரி சுப்பிரமணி, தாசில்தார் சிவப்பிரகாசம், நகராட்சி ஆணையாளர் சிசில்தாமஸ், கிராம நிர்வாக அலுவலர் சற்குணகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாவட்ட நிர்வாகம் திருப்பத்தூர் தாலுகா முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து அனைத்துப் பகுதிகளுக்கும் தடுப்பு அமைத்து வருகிறது. போலீஸ் காவல் போடப்பட்டு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கே சென்று காய்கறிகள், மளிகைப் பொருட்கள், மருந்து வழங்க, அவசர உதவிக்கு செல்போன்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட தடைகளை வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.நாகராஜன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேரில் வந்து அங்குள்ள கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார். அங்கு, திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் காவல்துறை மூலம் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களையும், வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களையும் கூகுள் மூலம் செல்போனில் கட்டுப்பாட்டு அறையில் உள்ள மானிட்டரில் இருந்து கண்காணிக்கும் முறையை கேட்டறிந்தார். அப்போது மாவட்ட கலெக்டர் சிவன்அருளுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாவட்ட காவல் துறையுடன் இணைந்து ஊரடங்குக்காக செய்யப்பட்ட பணிகள் குறித்துக் கேட்டறிந்தார். ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உடனிருந்தார்.

Next Story