வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை


வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை
x
தினத்தந்தி 19 April 2020 12:34 PM IST (Updated: 19 April 2020 12:34 PM IST)
t-max-icont-min-icon

வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளார். புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரி, 

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 5 பேர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் ஒருவர் நேற்று குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். இன்னும் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களும் நல்ல நிலையில் உள்ளனர்.

புதுச்சேரியில் 2 ஆயிரம் பேரும், காரைக்காலில் 210 பேரும், மாகியில் 79 பேரும் கண்காணிப்பில் உள்ளனர். காட்டேரிக்குப்பம் பகுதியில் ஒரு நபர் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்ததால் அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டது. அவருக்கு இரண்டு முறை சோதனை நடத்தப்பட்டு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இன்று முதல் (ஞாயிற்றுக்கிழமை) காட்டேரிக்குப்பம் பகுதி மக்கள் தடைகள் தளர்த்தப்பட்டு சகஜமாக இருக்க அனுமதிக்கப்படுவார்கள்.

நாளை (திங்கட்கிழமை) முதல் கட்டுமான பணி அனுமதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் அதற்கு இன்னொரு தடை உள்ளது. அதாவது இரும்பு, சிமெண்டு, மின்சாதன பொருட்கள் விற்பனை கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக வர்த்தக சபையினரும், மின்சாதன பொருட்கள் விற்பனையாளர்களும் என்னை சந்தித்து பேசினர். அப்போது கடைகளை திறக்க அனுமதிக்குமாறு வலியுறுத்தினார்கள். இதுதொடர்பாக நான், உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளேன். விரைவில் அதற்கு நல்ல பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

நாளை முதல் ஓட்டல்களை திறக்கலாம். ஆனால் அங்கு வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. பார்சல் வாங்கி செல்லலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகளில் மக்கள் சமூக இடைவெளி விட்டு இறைச்சி வாங்கி செல்ல வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். கண்ட இடத்தில் எச்சில் துப்புபவர்கள், முககவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக 95 சதவீதம் பேர் முக கவசம் அணிந்துள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில் அரசின் மீது களங்கம் கற்பிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் விண்ணப்பம் ஒன்று பரவி வருகிறது. அதாவது மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்கள் இலவச அரிசி பெற துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதுபோன்ற விண்ணப்பம் எதுவும் துறை சார்பில் வெளியிடப்படவில்லை.

இந்த வதந்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இக்கட்டான இந்த காலகட்டத்தில் தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story