பூட்டை உடைத்து துணிகரம்: மதுபான குடோனில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் கொள்ளை - 2 வாலிபர்கள் கைது


பூட்டை உடைத்து துணிகரம்: மதுபான குடோனில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் கொள்ளை - 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 19 April 2020 12:34 PM IST (Updated: 19 April 2020 12:34 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் மதுபான குடோன் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை கொள்ளையடித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதுவையில் மதுக்கடைகள், மதுபான குடோன்கள், சாராயம் மற்றும் கள்ளுக் கடைகள் மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கள்ள மார்க்கெட்டில் மது பாட்டில்கள் விற்கப்பட்டன. இதற்கு உடந்தையாக இருந்த 28 மதுபான கடைகளின் (11 மதுபான கடை, 14 சாராயக்கடை, 3 கள்ளுக்கடை) உரிமத்தை கலால் துறை தற்காலிகமாக ரத்து செய்தது. மதுபான குடோன் களுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டன. மதுபானங்களை பதுக்கி விற்றதாக இதுவரை 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையொட்டி மாவட்ட கலெக்டர் அருண் உத்தரவின்படி மதுபான குடோன்களில் இருப்பு விவரங்களை கலால் துறை அலுவலர்கள் சரிபார்த்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை மறைமலை அடிகள் சாலையில் உள்ள ஒரு மதுக்கடை குடோனில் பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களும் சேதப்படுத்தப்பட்டு இருந்தன.

காலையில் அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மதுபான குடோன் அதிபர் அங்கு வந்து பார்த்தபோது மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசுக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீசார் மதுபான குடோனுக்கு வந்து விசாரணை நடத்தினர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் மதுபான குடோனுக்குள் புகுந்து மது பாட்டில்களை கொள்ளையடித்தவர்களின் அடையாளம் தெரிந்தது.

கொள்ளையர்கள் மதுபான குடோனை ஒட்டியுள்ள தகர செட்டில் ஏறி நின்று மதுபான பெட்டிகளை கடத்த முயன்றுள்ளனர். 2 பெட்டிகளை கடத்திய நிலையில் அந்த தகர செட் உடைந்து சேதமடைந்ததால் மீதம் இருந்த மதுபான பெட்டிகளை அப்படியே போட்டு விட்டு அவர்கள் தப்பிச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து குடோன் பூட்டை உடைத்து மது பாட்டில்களை கொள்ளையடித்ததாக முத்தியால்பேட்டை பிரியதர்ஷினி நகரை சேர்ந்த ஜெயமூர்த்தி (வயது 22), சந்துரு (23) ஆகியோரை ஒதியஞ்சாலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 565 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நகரின் மைய பகுதியில் மதுக்கடை குடோன் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story