ஊரடங்கால் பல லட்சம் ரூபாய் தேன் தேக்கம்: தேனீ வளர்ப்பு தொழிலுக்கு அனுமதி அளிக்கப்படுமா? - பெண்கள், விவசாயிகள் எதிர்பார்ப்பு
ஊரடங்கால் சாத்தான்குளம் பகுதியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தேன் தேக்கம் அடைந்து உள்ளது. தேனீ வளர்ப்பு தொழிலுக்கு ஊரடங்கு விதிகளை தளர்த்தி அனுமதி அளிக்கப்படுமா? என்று பெண்கள், விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
சாத்தான்குளம்,
மருத்துவ குணம் வாய்ந்ததும், கெட்டுப்போகாத தன்மையும் உடைய தூய தேனை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் பெரிதும் பயன்படுத்தி வந்துள்ளனர். தாவரங்களில் உள்ள பூக்களில் இருந்து தேனீக்கள் மகரந்தத்தை எடுப்பதால்தான், மகரந்தசேர்க்கை நடைபெற்று பூக்கள், காயாகி, கனியாகி, அனைத்து வகையான விவசாய சாகுபடிகளும் நடைபெறுகிறது. இவ்வாறு மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான உணவு உற்பத்திக்கு அடிப்படையாக தேனீக்கள் திகழ்கிறது.
தேனீக்கள் சுறுசுறுப்பாகவும், கூட்டமாகவும், தலைமைக்கு கட்டுப்பட்டும், ஒருங்கிணைந்தும் செயல்படக் கூடியவை. இவைகளில் ராணி தேனீ, ஆண் தேனீக்கள், வேலைக்கார தேனீக்கள் உள்ளன. ஒரு தேன்கூட்டில் ஒரு ராணி தேனீதான் இருக்கும். தேன்கூட்டின் தலைவியாக விளங்கும் ராணி தேனீயானது முட்டையிட்டு தேனீக்களை உருவாக்கவும், அனைத்து தேனீக்களையும் ஒருங்கிணைக்கும் பணியையும் செய்கிறது. ஆண் தேனீக்கள் இனப்பெருக்கத்துக்கும், வேலைக்கார தேனீக்கள் பூக்களில் இருந்து மகரந்தத்தை சேகரிக்கும் பணிகளிலும் ஈடுபடுகிறது.
தேனீ வளர்ப்பு தொழிலானது எளிய முறையில் லாபம் ஈட்டும் தொழிலாக உள்ளது. வீட்டின் பின்புறம், மாடி, தோட்டம் போன்ற எந்த இடத்திலும் தேன் பெட்டிகளை அமைத்து தேனீக்களை வளர்க்கலாம். தேன் பெட்டிகளில் வரிசையாக அடுக்கப்பட்ட சட்டங்களில் மெழுகினாலான தேனடையை தேனீக்கள் உருவாக்கி, அதில் தேனை சேகரிக்கின்றன. தேனடையில் சேகரிக்கப்பட்ட தேனை சில மாதங்களுக்கு ஒரு முறை எடுத்து சேகரித்து, பாட்டில்களில் அடைத்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். தேனடையில் இருந்து மெழுகு தயாரித்தும் விற்பனை செய்யலாம்.
தேனின் அடர்த்தியை பொறுத்து அதன் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. நீர்ச்சத்து மிகுந்த தேன் ஒரு லிட்டர் ரூ.250–க்கும், நீர்ச்சத்து குறைந்த அடர்த்தியான தேன் ஒரு லிட்டர் ரூ.650 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. அடர்த்தியான தேன் மருத்துவ குணம் மிகுந்தும், பல ஆண்டுகள் கெட்டுப்போகாத தன்மையுடனும் விளங்குகிறது. தேனீக்கள் தேனை உறிஞ்சும் பூக்களின் தன்மையை பொறுத்து தேனின் அடர்த்தி மாறுபடுகிறது.
சாத்தான்குளம், உடன்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மகளிர் சுய உதவிக்குழுவினர், விவசாயிகள் போன்றவர்கள் தேனீ வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். இப்பகுதியில் பனை, முருங்கை, தென்னை மரங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் இங்கு உற்பத்தி செய்யப்படும் தேன் அதிக அடர்த்தியாகவும், தனிச்சுவையாகவும் உள்ளது. இதனால் அவற்றுக்கு அதிக விலை கிடைக்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேனை பாட்டில்களில் அடைத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து வந்தனர்.
விவசாய நிலங்களில் தேன் பெட்டிகளை வைத்து தேனீக்களை வளர்ப்பதால், விவசாய உற்பத்தியும் அதிகரிக்கிறது. இது விவசாயிகளுக்கு இரட்டிப்பு நன்மையை தருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், உற்பத்தி செய்யப்பட்ட தேனை வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தேன் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் தேனீ வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், விவசாயிகள் வருமானம் இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் ஊரடங்கு விதிகளை தளர்த்தி தேனீ வளர்ப்பு தொழிலுக்கு அனுமதி அளிக்கப்படுமா? என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதுகுறித்து தேனீ வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியதாவது:–
சாத்தான்குளம் பகுதியில் கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் நடத்தப்படும் விடியல் மகளிர் தேன் உற்பத்தியாளர் கூட்டமைப்பில் 500 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இங்குள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்யும் தேனை சாரல் நாட்டு தேன் என்ற பெயரில் விற்பனை செய்து வருகின்றனர். தேனீ வளர்ப்பு தொழிலானது, விவசாயம் சார்ந்த தொழிலில் இடம் பெறவில்லை. இதனால் ஊரடங்கின்போது, உற்பத்தி செய்யப்பட்ட தேன் மற்றும் தேன்பெட்டிகள் போன்றவற்றை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல முடியவில்லை.
மேலும் தேன் பெட்டிகளை விவசாயம் அதிகம் நடைபெறும் இடங்களில் கொண்டு சென்று சில மாதங்கள் வைப்பார்கள். இவ்வாறு சாத்தான்குளம் பகுதியில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரப்பர் தோட்டங்களில் வைத்திருந்த தேன் பெட்டிகளை தற்போது மீண்டும் சாத்தான்குளம் பகுதிக்கு கொண்டு வர முடியாத நிலை உள்ளது. எனவே விவசாயத்தைப் போன்று, தேனீ வளர்ப்பு தொழிலுக்கும் அரசு ஊரடங்கு உத்தரவு விதிகளை தளர்த்தி அனுமதிக்க வேண்டும். ஊரடங்கால் வருமானம் இழந்து வாடும் தேனீ வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story