மாவட்டத்தில் மது, சாராயம் விற்ற 821 பேர் கைது: 99 வாகனங்கள் பறிமுதல்


மாவட்டத்தில் மது, சாராயம் விற்ற 821 பேர் கைது: 99 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 20 April 2020 3:45 AM IST (Updated: 20 April 2020 1:53 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் மது, சாராயம் விற்ற 821 பேர் கைது செய்யப்பட்டனர். 99 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மது குடிப்பவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனிடையே மாவட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்களை கைது செய்ய 5 தனிப்படைகளை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு தீபாகனிக்கர் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து தனிப்படையினர் கல்வராயன் மலை, ஏற்காடு, கணவாய்புதூர் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் தீவிர வேட்டை நடத்தி வருகின்றனர். மாவட்டத்தில் கடந்த 25-ந் தேதி முதல் நேற்று வரை மது, சாராயம் விற்பனை செய்ததாக 752 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 765 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1,500 லிட்டர் சாராயம் மற்றும் 63 லிட்டர் மது ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதவிர 3,600 லிட்டர் சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டன. மேலும் 88 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சேலம் மாநகரில் இதுவரை சாராயம், மது விற்றதாக 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 56 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 671 மது பாட்டில்கள், 25 லிட்டர் சாராயம், 54 லிட்டர் கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாவட்டத்தில் மொத்தம் மது, சாராயம் விற்றதாக 821 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story