தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படும் முதல் வாரத்தில் தேர்வுகளை நடத்த திட்டம் - அமைச்சர் தகவல்
தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படும் முதல் வாரத்தில் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
காரிமங்கலம்,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் மற்றும் அமைப்புசாரா நல வாரிய உறுப்பினர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். திட்ட இயக்குனர் ஆர்த்தி, தொழிலாளர் துறை இணை ஆணையர் ரமேஷ், உதவி ஆணையர் இந்தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படும் முதல் வாரத்தில் 2019-2020-ம் கல்விஆண்டிற்கான தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள கல்லூரிகளில் மாணவர்களுக்கு நடத்த வேண்டிய பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. கல்லூரிகள் திறந்த பின் தேர்வுகளுக்கு அவகாசம் அளிக்கப்படும் என்று நினைக்காமல் தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும். மாணவர்கள் பாடங்களில் தங்களுக்கு உள்ள சந்தேகங்களை பேராசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். கல்லூரிகளில் தேர்வுகளை நடத்திய பின்னர் 2020-2021-ம் ஆண்டிற்கான பாட வகுப்புகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில்தான் கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்த மாவட்டத்தில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 785 பேர் நிவாரண உதவித்தொகை மற்றும் நிவாரண பொருட்கள் பெற உள்ளனர். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை மையத்தில் இதுவரை 1,200 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெரியண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் காவேரி, கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவிசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, தண்டபாணி, தாசில்தார் கலைச்செல்வி, பேரூராட்சி செயல்அலுவலர் முகமது இப்ராகிம், ஊராட்சி மன்ற தலைவர்கள் மகேந்திரன், ஜெயலட்சுமிசங்கர், சாந்திசம்பத் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story