கொரோனா தொற்றை 30 நிமிடங்களில் கண்டறியும் 720 “ரேபிட் டெஸ்ட் கிட்” கருவி தஞ்சைக்கு வந்தது
கொரோனா தொற்றை 30 நிமிடங்களில் கண்டறியும் 720 “ரேபிட் டெஸ்ட் கிட்” கருவி நேற்று தஞ்சைக்கு வந்தது.
தஞ்சாவூர்,
கொரோனா தொற்றை 30 நிமிடங்களில் கண்டறியும் 720 “ரேபிட் டெஸ்ட் கிட்” கருவி நேற்று தஞ்சைக்கு வந்தது.
கொரோனாவால் 46 பேர் பாதிப்பு
கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கும்பகோணத்தை சேர்ந்த ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டார். மற்றவர்கள் தஞ்சையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சை, திருவையாறு, வல்லம், பாபநாசம், பட்டீஸ்வரம், கும்பகோணம், அதிராம்பட்டினம், ஒரத்தநாடு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் வசித்து வந்த பகுதிகள் அனைத்தும் “சீல்” வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மருத்துவக்குழு கண்காணிப்பு
மேலும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், அவர்களை சந்தித்த நபர்களும் தனிமை படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களில் நோய் அறிகுறி இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவர்கள் வசித்த பகுதிகள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மருத்துவக்குழுவினர் நோய் தொற்று பரவுவதை தடுக்க மருத்துவக்குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ஆரம்பத்தில் கொரோனா பரிசோதனை திருவாரூரில் உள்ள மருத்துவக்கல்லூரியில் செய்யப்பட்டது. இதனால் முடிவுகள் வருவதில் தாமதம் ஆனது.
30 நிமிடங்கள்
இதையடுத்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 13-ந் தேதி முதல் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. தினமும் 100 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து தஞ்சையில் உள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக்கழகமும் கொரோனா நோய் தொற்றை கண்டறியும் பரிசோதனை கருவியையும் வழங்கியது. அதன் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனா தொற்றை எளிதில் கண்டறியும் நவீன கருவியான “ரேபிட் டெஸ்ட் கிட்” கருவி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இந்த கருவிகள் தமிழகத்துக்கு 36 ஆயிரம் கருவிகள் வந்தன. இது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்துக்கு நேற்று இந்த கருவிகள் வந்தன. இந்த கருவி மூலம் கொரோனா தொற்று உள்ளதா, என்பதை 30 நிமிடங்களில் கண்டறியலாம்
720 “ரேபிட் டெஸ்ட் கிட்” கருவி
இது குறித்து தஞ்சை மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரவீந்திரனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்திற்கு முதல் கட்டமாக 720 “ரேபிட் டெஸ்ட் கிட்” கருவி திருச்சி வந்து அங்கிருந்து தஞ்சைக்கு வந்துள்ளது.
இந்த கருவி மூலம் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அவர்கள் வசித்த பகுதிகளில் உள்ளவர்கள், அவர்களை சந்தித்தவர்களுக்கு உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் யாரும் பாதிக்கப்பட்டு உள்ளனரா? என்பதை உடனடியாக கண்டறியலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story