கிருஷ்ணகிரி பகுதியில் குண்டுமல்லி விலை கடும் வீழ்ச்சி - விவசாயிகள் கவலை


கிருஷ்ணகிரி பகுதியில் குண்டுமல்லி விலை கடும் வீழ்ச்சி - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 20 April 2020 4:30 AM IST (Updated: 20 April 2020 5:01 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளில் பூக்களை வாங்க ஆட்கள் வராததால் குண்டு மல்லி விலை கடும் வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.40-க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி,

கொரோனா வைரஸ் பரவுதல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் கிருஷ்ணகிரி சுற்று வட்டாரத்தில் குண்டுமல்லி பூ விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஊரடங்கிற்கு முன்பு வரையில் ஒரு கிலோ ரூ.400 மற்றும் அதற்கு மேலும் விற்பனை ஆகி வந்தது.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த சில நாட்களாக குண்டுமல்லி பூ கிலோ ரூ.40-க்கு விற்கப்படுகிறது. இதை வாங்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் வராததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் செடிகளில் இருந்த பூக்களை பறித்து கிடைத்த வரையில் லாபம் என்று விவசாயிகள் அந்த பூக்களை விற்பனை செய்து வருகிறார்கள்.

இது குறித்து மேலேரி கொட்டாய் பகுதி விவசாயிகள் கூறுகையில், முன்பெல்லாம் குண்டுமல்லி பூ ஒரு கிலோ ரூ.400 வரையில் விற்பனை ஆனது. குறிப்பாக ஆயுதபூஜை மற்றும் பண்டிகை நாட்களில் ரூ.1,000-க்கு விற்பனை ஆகி வந்தது. தற்போது ஊரடங்கால் பூ மார்க்கெட்டுகள் மூடப்பட்டுள்ளன. மேலும் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குண்டுமல்லி பூக்களை வாங்க ஆட்கள் வராததால் தற்போது கிலோ ரூ.40-க்கு விற்பனை ஆகிறது. அதை கூட வாங்க யாரும் வருவதில்லை. செடிகளில் அப்படி பூக்களை விட்டால் செடி பாதிப்படையும் என்பதற்காக அதை பறித்து, கிடைத்த விலைக்கு விற்பனை செய்து வருகிறோம் என்று விவசாயிகள் கவலையுடன் கூறினார்கள்.

கிருஷ்ணகிரி சுற்று வட்டாரத்தில் மல்லிகை பூ ஒரு முழம் ரூ.30 முதல் ரூ.40 வரையில் விற்பனை ஆகி வந்தது. கடந்த சில நாட்களாக ஒரு முழம் பூ ரூ.5-க்கே விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் தாங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகளும், பூ வியாபாரிகளும் தெரிவித்தனர்.

Next Story