காணொலி காட்சி மூலம் பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் - கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு முக்கியத்துவம்
காணொலி காட்சி மூலம் பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் இன்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்பு உள்ளது.
பெங்களூரு,
198 வார்டுகளை உள்ளடக்கிய பெங்களூரு மாநகராட்சியின் வளர்ச்சிக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் பட்ஜெட் (நிதி-நிலை) தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2020-21-ம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அதாவது இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்ததால் பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமலில் இருந்தது. இதனால் முதல்முறையாக மாநகராட்சி பட்ஜெட் தள்ளிப்போனது. இதைதொடர்ந்து கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்வதில் 2-வது முறையாக தாமதம் ஆனது.
இன்று தாக்கல்
இந்த நிலையில் மாநகராட்சி மேயர் கவுதம்குமார், கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக தலைமை செயலாளர் விஜயபாஸ்கருக்கு மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில், கர்நாடக கூடுதல் தலைமை செயலாளர், மாநகராட்சி கமிஷனர் அனில்குமாருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், காணொலி காட்சி மூலம் மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் அனில்குமார், வருகிற 20-ந்தேதி (அதாவது இன்று) பெங்களூரு மாநகராட்சியில் 2020-21-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்தார். அதன்படி பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் இன்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது.
ரூ.11 ஆயிரம் கோடி
இதுகுறித்து வரி மற்றும் பொருளாதார நிலைக்குழு தலைவர் சீனிவாஸ் கூறுகையில், பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் நாளை (அதாவது இன்று) தாக்கல் செய்யப்பட உள்ளது. மொத்தம் ரூ.11 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். கொரோனா தடுப்பு பணிக்காக ஒவ்வொரு வார்டுக்கும் தலா ரூ.25 லட்சம் ஒதுக்கப்படும். அதுபற்றிய அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியாகும்.
பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்தில் நடக்கும் இந்த பட்ஜெட் கூட்டத்தில், மேயர் கவுதம்குமார், துணை மேயர் ராமமோகன் ராஜ், மாநகராட்சி கமிஷனர் அனில்குமார், எதிர்க்கட்சி தலைவர்கள் அப்துல் வாஜித்(காங்கிரஸ்), நேத்ரா நாராயண் (ஜனதாதளம்(எஸ்)) மற்றும் பலர் கலந்துகொள்வார்கள். மாநகராட்சியில் உள்ள 8 மண்டலங்களின் அலுவலகங்களில் கவுன்சிலர்கள் கலந்துகொள்வார்கள். காணொலி காட்சி மூலம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றார்.
Related Tags :
Next Story