கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு: கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்த்தப்படுமா? - இன்று நடக்கும் மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவுதளர்த்தப்படுவது பற்றி இன்று (திங்கட்கிழமை) முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் நடைபெறும் மந்திரிசபை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.
பெங்களூரு,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
கடந்த 14-ந் தேதியுடன் முடிவடைவதாக இருந்த இந்த ஊரடங்கு மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மக்கள் சந்திக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு, 20-ந் தேதி (அதாவது இன்று) முதல் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
அதன்படி சில நிபந்தனைகளுடன் ஊரக பகுதிகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தொழிற்பேட்டைகளில் உள்ள தொழிற்சாலைகள் செயல்படலாம் என்றும், வேளாண்மை பணிகள் நடைபெறலாம் என்றும், கிராமப்புற பகுதிகளில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
ஊரடங்கு தளர்த்தப்படுமா?
இதற்கிடையே கர்நாடகத்தில் கொரோனா தடுப்பு ஊரடங்கு வருகிற 21-ந்தேதி (அதாவது நாளை) முதல் தளர்த்தப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.
அதாவது சரக்கு வாகனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்பேட்டைகள், தகவல், உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கர்நாடகத்தில் ஊரடங்கை தளர்த்துவதா?, வேண்டாமா? என்று கர்நாடக அரசு தீவிர ஆலோசனையில் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று வரை கர்நாடகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 374 ஆக உள்ளது. அதே வேளையில் 16 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
நாளை அமலுக்கு வர இருந்த இந்த ஊரடங்கு தளர்வு, ஒரு நாள் அதாவது நாளை (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார். இதனால் கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்ப்பு மேலும் தள்ளி போகலாம் என கூறப்படுகிறது.
அதே வேளையில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் கர்நாடக மந்திரிசபை கூட்டம் பெங்களூருவில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் ஊரடங்கு தளர்வு பற்றி விவாதிக்கப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்த்தப்படுவது பற்றி இறுதி முடிவுகளை எடியூரப்பா அறிவிக்க உள்ளார்.
Related Tags :
Next Story