ஊரடங்கின்போது வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம் பிடித்த கல்லூரி மாணவி கோவிலில் மாலை மாற்றி திருமணம்
ஊரடங்கின்போது வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம் பிடித்தார் கல்லூரி மாணவி. அவர்கள், கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
மலைக்கோட்டை,
ஊரடங்கின்போது வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம் பிடித்தார் கல்லூரி மாணவி. அவர்கள், கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
காதல்
திருச்சி சிந்தாமணி காந்திநகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் வினோத் (வயது 25). ஐ.டி.ஐ. முடித்துள்ள இவர், திருச்சி அரியமங்கலத்தில் பஸ்-லாரிகளுக்கு பாடி கட்டும் பட்டறை ஒன்றில் வேலை செய்து வருகிறார். திருச்சி-மதுரை ரோடு ஜீவாநகரை சேர்ந்தவர் ஜீவிதா (20). இவர், திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி 3-ம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் கல்லூரி மற்றும் பாடி கட்டும் பட்டறை செயல்பட வில்லை.
கல்லூரி அருகில் பூசாரி தெருவில் ஜீவிதாவின் தோழி வீடு உள்ளது. அடிக்கடி தோழி வீட்டுக்கு அவர் சென்று வருவது வழக்கம்.
அப்போதுதான் தோழி மூலம் வினோத் அறிமுகமானார். தோழி மூலம் இருவரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் நட்பாக பழகினர். பின்னர், அதுவே காதலாக மலர்ந்தது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர்கள் காதலித்து வந்தனர்.
கோவிலில் மாலை மாற்றி திருமணம்
மகளின் காதல் விவகாரம், பெற்றோருக்கு தெரிய வந்தது. காதல் ஜோடி வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்ப்பு கிளம்பியது. கொரோனா ஊரடங்கு முடிந்ததும் மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஊரடங்கு வேளையிலும் காதலில் பிடிவாதமாக இருந்த ஜீவிதா, வீட்டை விட்டு வெளியேறி காதலன் வினோத்தை கீழ சிந்தாமணியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் கரம் பிடித்தார். காதலன் வீட்டார் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
காதலனுடன் செல்லவே விருப்பம்
இந்தநிலையில் மகளை மீட்டுத்தரும்படி கோட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் இருவரின் பெற்றோரையும் போலீஸ் நிலையம் வரச் செய்தனர். இருதரப்பு பெற்றோரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் சமாதானம் பேசினார். அப்போது ஜீவிதா, காதலனுடன் தான் செல்வேன், பெற்றோருடன் செல்ல மாட்டேன் என உறுதியாக தெரிவித்தார். முடிவில் போலீசார், ஜீவிதா விருப்பப்படியே காதலனுடன் அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story