பண்ருட்டியை சேர்ந்த தாய்-மகனுக்கு கொரோனா
டெல்லி மாநாடு சென்று திரும்பி வந்தவருடன் தொடர்பில் இருந்த பண்ருட்டியை சேர்ந்த தாய்-மகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர்,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கடலூர் மாவட்டத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் உள்ள நிலவரப்படி மாவட்டத்தில் 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நேற்று 250 பேரின் உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரி பரிசோதனை முடிவுக்கு வந்தது. இதில் பண்ருட்டியை சேர்ந்த 35 வயது பெண் மற்றும் இவரது 10 வயது மகனுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 248 பேருக்கு கொரோனா இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் கணவர் டெல்லி மாநாடு சென்று வந்தவர். கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்ததை அடுத்து அவரை மருத்துவமனையில் இருந்து விடுவித்து வீட்டில் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவரது மனைவி மற்றும் மகனுக்கு கொரோனா உறுதியாக இருப்பது வியப்பாக உள்ளது.
இதையடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்ட தாய் மகன் இருவரையும் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் அழைத்துச் சென்றனர். மேலும் இவர்களின் வீட்டை சுற்றிலும் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நேற்று சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதையடுத்து தற்போது அங்கு 20 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள், அறிகுறி காணப்பட்டவர்கள் 6 பேர் கடலூர் அரசு மருத்துவமனையிலும் 39 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் என மொத்தம் 45 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்னும் 255 பேரின் உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரி பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story