புதுக்கோட்டையில் அதிகரிக்கும் சாராயம் காய்ச்சும் கலாசாரம் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பலனில்லை
ஊரடங்கினால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுவது அதிகரித்துள்ளது. போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பலன்இல்லாமல் உள்ளது.
புதுக்கோட்டை,
ஊரடங்கினால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுவது அதிகரித்துள்ளது. போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பலன்இல்லாமல் உள்ளது.
ஊரடங்கு
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், அதன் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்திலும் டாஸ்மாக் கடைகள் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த நாள் முதல் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் மது குடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
மது குடித்தே ஆக வேண்டும் என்ற மனநிலையில் இருக்கும் சிலர், மாற்று முறையாக மருந்துகளை குடித்து வருவதாக ஆங்காங்கே செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. கோட்டைப்பட்டினம் அருகே போதைக்காக சேவிங் லோசனை குளிர்பானத்தில் கலந்து குடித்த மதுப்பிரியர்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாராயம் காய்ச்சுதல்
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதால் மதுப்பிரியர்கள் சிலர் தற்போது சாராயம் காய்ச்சி குடிக்க தொடங்கிவிட்டனர். சிலர் விற்கவும் தொடங்கி உள்ளனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சாராயம் காய்ச்சும் கலாசாரம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆங்காங்கே அடிக்கடி சோதனை செய்து, சாராயம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களையும், சாராயத்தையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அந்தவகையில் தினமும் மாவட்டத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் கைது நடவடிக்கை தொடர்கிறது. நேற்று முன்தினமும் திருக்கோகர்ணம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாராயம் காய்ச்சியதாக வெவ்வேறு இடங்களில் புதுக்கோட்டை நரிமேடு பகுதியை சேர்ந்த வாசுதேவன் (வயது 38), திருவப்பூர் பகுதியை சேர்ந்த மங்கைய்யா (60) ஆகியோரை இன்ஸ்பெக்டர் கவுரி கைது செய்தார். என்னதான் போலீசார் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் சாராயம் காய்ச்சும் சம்பவங்கள் அதிகரிக்கவே செய்கிறது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல், இந்த ஊரடங்கு காலத்தில் மதுப்பிரியர்கள், மதுப்பழக்கத்தை தாங்களாகவே குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதே இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Tags :
Next Story