ஊழியர்கள் முக கவசம் அணிந்து வரவேண்டும்: இன்று முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
இன்று முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும். ஊழியர்கள் முக கவசம் அணிந்து வரவேண்டும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. தற்போது 3 பேர் தான் சிகிச்சையில் உள்ளனர். 3 ஆயிரத்து 45 பேர் கண்காணிப்பில் உள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக இருந்த காட்டேரி குப்பத்தில் நேற்று முதல் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது.
இன்று (திங்கட்கிழமை) முதல் மத்திய அரசின் விதிமுறைப்படி பல்வேறு துறைகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இதன்படி விவசாயிகள் தங்கள் பணிகளை தொடங்கலாம். அவர்களுக்கு தேவையான இடுபொருள் கடைகள் திறந்திருக்கும். விளைபொருட்களை கொண்டு செல்ல வாகன அனுமதி தேவையில்லை. கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அவற்றுக்கு தேவையான உபகரணங்கள் விற்பனை செய்யும் கடைகளை திறக்க அனுமதி இல்லை. அவற்றுக்கு அனுமதி வழங்க கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
மீன்பிடித்தொழில் நமது மாநிலத்தில் தடை செய்யப்பட்டிருந்தாலும் மத்திய அரசு மீன்பிடிக்க அனுமதி வழங்கியுள்ளது. தகவல் தொழில் நுட்ப தொழிற்சாலைகள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கலாம். இந்த நடைமுறைகள் நமது மாநிலத்திலும் அமலுக்கு வருகிறது. ஆனால் அதற்கு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தான் அனுமதி தரப்படும்.
தொழிற்சாலைகள் முழுவீச்சில் தங்களது உற்பத்தியை உடனடியாக தொடங்க முடியாது. அதற்கு கடுமையான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தொழிற்சாலைகளுக்கு வரும் தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். தொழிற்சாலையில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வெளி மாநிலத்தவர் யாரையும் வேலைக்கு கொண்டு வரக்கூடாது. புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களை வைத்து வேலை செய்யலாம்.
தொழிற்சாலையில் ஏற்கனவே தங்கி உள்ளவர்களுக்கு அனுமதி உண்டு. தொழிற்சாலைக்கு வருபவர்கள் தேவை இல்லாமல் வெளியே செல்லக்கூடாது. தொழிற்சாலைக்கு அருகிலேயே அவர்களை தங்க வைத்து பராமரிக்க வேண்டும். இதுபோன்ற விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் அனுமதியை ரத்து செய்து விடுவோம். தொழிற்சாலைகளை திறக்கும் போது எந்தவித பாதிப்பும் மக்களுக்கு வரக்கூடாது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தேவையான உபகரணங்களை மாநில அரசுகளே இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். ஏனெனில் மத்திய அரசிடமிருந்து நமக்கு போதிய உபகரணங்கள் கிடைப்பதில்லை. எனவே மாநிலங்களே நேரடியாக இறக்குமதி செய்ய தாராளமாக அனுமதி தரவேண்டும். இந்த மருத்துவ உபகரணங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது. இந்த கால கட்டத்தில் அந்த வரியை ரத்து செய்ய வேண்டும். புதுவை மாநிலத்தில் இன்று முதல் அரசு அலுவலகங்கள் செயல்படத் தொடங்குகின்றன. 33 சதவீத பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும். பணிக்கு வருபவர்கள் தவறாது முக கவசம் அணிந்து வரவேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
Related Tags :
Next Story