பச்சிளம் குழந்தை உள்பட மேலும் 5 பேருக்கு கொரோனா கோவை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 133 ஆக உயர்வு
பிறந்து 10 நாட்களான பச்சிளம் குழந்தை உள்பட மேலும் 5 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கோவை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்து உள்ளது.
கோவை,
கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று குறைந்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் ஒருவருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 128 என இருந்தது.
இந்த நிலையில் நேற்று மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் பொள்ளாச்சி ஊஞ்சவேலம்பட்டியை சேர்ந்த பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை, ஆத்து பொள்ளாச்சியை சேர்ந்த 40 வயது பெண் , சிறுமுகை பகுதியை சேர்ந்த 41 வயது பெண், 20 வயது ஆண் மற்றும் வால்பாறையை சேர்ந்த 26 வயது பெண் (இவருக்கு கடந்த 17-ந்தேதிதான் குழந்தை பிறந்தது) ஆகிய 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கோவையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 133-ஆக அதிகரித்து உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஆனைமலையை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த வாரம் குழந்தை பிறந்தது. இந்த பெண்ணின் சளி, ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பிற கர்ப்பிணிகள், அவர்களை காண வந்த உறவினர்கள், சுகாதார பணியாளர்கள் என 20-க்கும் மேற்பட்டவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஊஞ்சவேலம்பட்டியை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த குழந்தையின் தாயின் பரிசோதனை முடிவு வர வில்லை. அது வந்த பின்னரே அந்த பெண்ணிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என தெரிய வரும்.
இவர்கள் அனைவரும் கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 22 பேர் நேற்று குணமடைந்து வீட்டிற்கு திரும்பினர். இவர்களில் 18 பேர் கோவையை சேர்ந்தவர்கள் 4 பேர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்களை அங்கிருந்த மருத்துவ பணியாளர்கள் வழியனுப்பி வைத்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story