திருப்பத்தூர் மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் தொடரும்: ஆம்பூரில் ‘ரேபிட் டெஸ்ட்’ மூலம் பரிசோதனை தொடக்கம் - கலெக்டர் சிவன்அருள் பேட்டி


திருப்பத்தூர் மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் தொடரும்: ஆம்பூரில் ‘ரேபிட் டெஸ்ட்’ மூலம் பரிசோதனை தொடக்கம் - கலெக்டர் சிவன்அருள் பேட்டி
x
தினத்தந்தி 20 April 2020 1:17 PM IST (Updated: 20 April 2020 1:17 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும், ஆம்பூரில் நாளை (அதாவது இன்று திங்கட்கிழமை) முதல், ‘ரேபிட் டெஸ்ட்’ மூலம் பரிசோதனை செய்யும் பணி தொடங்க உள்ளதாக கலெக்டர் சிவன்அருள் கூறினார்.

ஆம்பூர்,

ஆம்பூர் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள சில தொழில்களுக்கான தளர்வுகள் திருப்பத்தூர் மாவட்டத்தில் கிடையாது. தமிழக அரசு அறிவிக்கும் வரை மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் தொடரும்.

பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகைப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுவதால், மக்களின் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் இல்லாமல் அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றும் கட்டுக்குள் உள்ளது. ஆம்பூரில் இயங்கும் கொரோனா கட்டுப்பாட்டு அறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இது, கட்டுப்பாட்டு அறை என்பதை விட பொதுமக்களின் தேவைக்கான தொடர்பு அறையாக இயங்கி வருகிறது.

ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் தன்னார்வலர்களாக தங்களை பதிவு செய்து கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் காவல் துறையுடன் இணைந்து தன்னார்வலர்கள் அந்தந்தப் பகுதி பொதுமக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கச் செய்ய ஆர்வமுடன் செயலாற்றி வருகின்றனர்.

திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகியவை முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. 300 ரேபிட் கருவிகள் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு வந்துள்ளன. முதல் கட்டமாக ஆம்பூரில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் பரிசோதனை செய்யப்படும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முன்னணியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள், போலீசார் ஆகியோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகம் உள்ள ஆம்பூரை, தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். இதனால் ஆம்பூர் பகுதியில் நாளை (அதாவது இன்று திங்கட்கிழமை) முதல், ‘ரேபிட் டெஸ்ட்’ கருவிகள் மூலம் பரிசோதனை செய்யும் பணி தொடங்க உள்ளது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

அப்போது ரெயில்வே ஐ.ஜி.வனிதா மற்றும் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், தாசில்தார் செண்பகவல்லி, துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story