புளியங்குடியில் மேலும் 4 பேருக்கு கொரோனா - நெல்லை ஆஸ்பத்திரியில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
புளியங்குடியில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து 7 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
புளியங்குடி,
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. தென்காசி மாவட்டத்தில் ஏற்கனவே 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது. அவர்களில் 19 பேர் புளியங்குடியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இந்த நிலையில் புளியங்குடியில் நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் கள் 4 பேரும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து தென்காசி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
புளியங்குடியில் கொரோனா பரவல் வேகமாக உள்ளதால் அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நகரம் முழுவதும் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தடை உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே சுற்றித்திரிபவர்களை போலீசார் பிடித்து தனிமைப்படுத்துகின்றனர். இவ்வாறு நேற்று வெளியே சுற்றிய 10 பேர் போலீசாரால் பிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
புளியங்குடி பகுதி 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அப்பகுதியை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மக்களின் அவசர தேவைகளை நிறைவேற்ற போலீசார் கட்டுப்பாட்டு அறையை திறந்துள்ளனர்.
மக்கள் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசியதும், தன்னார்வ தொண்டர்கள் அவர்களது வீடுகளுக்கு சென்று, காய்கறிகள், பலசரக்கு, மருந்து உள்ளிட்ட தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.
நகரம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். நகராட்சி மூலம் அனைத்து தெருக்களிலும் ரூ.100 மதிப்பில் காய்கறி தொகுப்பு அடங்கிய பைகள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் முஸ்லிம் அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தன்னார்வ தொண்டர்கள் நகராட்சி ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், இன்ஸ்பெக்டர்கள் அலெக்ஸ்ராஜ், ஆடிவேல் மற்றும் போலீசார் நகரம் முழுவதும் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நகரசபை ஆணையாளர் குமார் சிங், பொறியாளர் சுரேஷ், சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், ஈசுவரன், தூய்மை இந்தியா மேற்பார்வையாளர் விஜயராணி மற்றும் சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் நகர் முழுவதும் தீவிர சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லையில் 7 பேர் வீடு திரும்பினர்
நெல்லை மாவட்டத்தில் 62 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இதுதவிர தூத்துக்குடி மாவட்டத்தில் சிலரும், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கொரோனா நோயாளிகளும் இந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 26 பேர் ஏற்கனவே சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று மேலும் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 5 பேர் மேலப்பாளையத்தை சேர்ந்தவர்கள். மற்ற 2 பேரில் ஒருவர் டவுனை சேர்ந்தவர், மற்றொருவர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
Related Tags :
Next Story