கிருஷ்ணகிரி அணையில் மதகுகள் அமைக்கும் பணிகள் மீண்டும் தொடக்கம்


கிருஷ்ணகிரி அணையில் மதகுகள் அமைக்கும் பணிகள் மீண்டும் தொடக்கம்
x
தினத்தந்தி 21 April 2020 4:45 AM IST (Updated: 21 April 2020 1:45 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அணையில் மதகுகள் அமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் பிரதான மதகுகளின் முதல் மதகு கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ந் தேதி உடைந்தது. அவ்வாறு உடைந்த மதகை அகற்றிவிட்டு, கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ந் தேதி புதிய மதகு பொருத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ரூ. 19 கோடி செலவில், மற்ற 7 மதகுகளையும் புதிதாக மாற்ற டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்கி நடந்து வந்தது. இதற்காக அந்த 7 மதகுகளும் அகற்றப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி முதல் புதிய மதகுகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணிகள் கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி நிறைவடைந்தது. இதில் 2, 3 மற்றும் 8-வது மதகுகளுக்கு முழுமையாக வெல்டிங் வைக்கும் பணிகள் முடிந்தன. மேலும் 4, 5, 6 மற்றும் 7 ஆகிய மதகுகளுக்கு வெல்டிங் வைக்கப்பட்டு வந்தன. இந்த பணியில் 60 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அந்த பணிகள் பாதி நிறைவடைந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மாதம் 25-ந் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டது. இதனால் மார்ச் மாதம் 23-ந் தேதியுடன் கிருஷ்ணகிரி அணையில் மதகுகள் பராமரிப்பு பணிகள் நின்றது. அந்த பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் அவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் மீண்டும் பணிக்கு திரும்பினார்கள். இதைத் தொடர்ந்து 28 பணியாளர்களை கொண்டு தற்போது 4, 5, 6மற்றும் 7-வது மதகுகளுக்கு வெல்டிங் வைக்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணிகள் முடிந்த பின் பெயிண்ட் அடிக்கும் பணிகள் தொடங்க உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story