கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் தானியங்கி வெப்ப கண்காணிப்பு கருவி


கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் தானியங்கி வெப்ப கண்காணிப்பு கருவி
x
தினத்தந்தி 21 April 2020 4:30 AM IST (Updated: 21 April 2020 2:11 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் தானியங்கி வெப்ப கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது.

சேலம்,

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திறந்தவெளிகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் எந்திரங்கள், வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் சேலம் மாநகராட்சி அலுவலகம், குமாரசாமிப்பட்டி நகர்புற சமுதாய சுகாதார நிலையம் ஆகியவற்றில் பொதுமக்களின் நலன் கருதி பெரு நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு நிதி உதவியின் கீழ் இந்தியன் வங்கி (அருணாசல ஆசாரி தெரு கிளை) சார்பில் தானியங்கி வெப்ப கண்காணிப்பு கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் தனது உடலில் வெப்பநிலையை பரிசோதித்தார்.

பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:-

மாநகராட்சி அலுவலகம் மற்றும் நகர்புற சமுதாய சுகாதார நிலையத்துக்கு வரக்கூடிய பொதுமக்கள் உடலின் வெப்பநிலை இந்த கருவியின் மூலம் பரிசோதிக்கப்படும். அப்போது காய்ச்சல் இருப்பவர்கள் உடனடியாக அடையாளம் கண்டு உரிய மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும். தானியங்கி வெப்ப கண்காணிப்பு கருவி மூலம் ஒரு நிமிடத்திற்கு 20 பேர் பரிசோதிக்கப்படுவார்கள். மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களை மாநகராட்சி பணிகள் மூலம் வீடுகளுக்கு சென்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

மேலும் இந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் உடல்நிலை குறித்து தினமும் மாநகராட்சி பணியாளர்கள் கேட்டறிந்து வருகின்றனர். மாநகராட்சி பகுதிக்கு 600 ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ பரிசோதனை கருவி வழங்கப்பட்டுள்ளது. இந்த கருவியை தடை செய்யப்பட்ட பகுதியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பரிசோதனை செய்து வருகிறோம் என்று அவர் கூறினார்.

தானியங்கி வெப்ப கண்காணிப்பு கருவி தொடக்க நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் பார்த்திபன், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் உன்னிகிருஷ்ணன், இந்நியன் வங்கியின் அருணாசல ஆசாரி தெரு கிளை மேலாளர் கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story