பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் ஒடிசா தொழிலாளர்களை ஒருங்கிணைக்க வாட்ஸ்-அப் குழு


பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் ஒடிசா தொழிலாளர்களை ஒருங்கிணைக்க வாட்ஸ்-அப் குழு
x
தினத்தந்தி 21 April 2020 4:30 AM IST (Updated: 21 April 2020 2:33 AM IST)
t-max-icont-min-icon

பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் ஒடிசா தொழிலாளர்களை ஒருங்கிணைக்க வாட்ஸ்-அப் குழு தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பூர், 

காஷ்மீர் தொடங்கி இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் திருப்பூருக்கு வந்து பணியாற்றி வருகிறார்கள். ஒடிசா மாநில அரசு திறன் வாய்ந்த தொழிலாளர்களை அங்கிருந்து, திருப்பூருக்கு அனுப்பியதோடு மட்டுமின்றி அவர்களை தொடர்ச்சியாக தற்போது கவனித்தும் வருகிறது. இதற்காக ஒடிசாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களுக்கான சேவை மையம் திருப்பூர் ராக்கியாபாளையத்தில் செயல்பட்டு வருகிறது.

தற்போது ஊரடங்கையொட்டி தொழிலாளர்களின் சிரமத்தை போக்கும் வகையிலும், அவர்களுக்கு தேவையான உதவியை செய்யும் வகையிலும் வாட்ஸ்-அப் குழுக்கள் தொடங் கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்த ஒடிசா மாநிலத் தொழிலாளர் சேவை மையத்தின் மேலாளர் என்.ராமசாமி கூறியதாவது:-

திறன் வாய்ந்த தொழிலாளர்களை அங்கு உருவாக்கி இங்கு அனுப்புகிறார்கள். அதேபோல் இங்கு வந்து தொழில் கற்றுக்கொள்பவர்களும் உண்டு. ஒடிசா மாநில அரசு கடந்த 2 ஆண்டுகளில் 8 ஆயிரம் பேரை அனுப்பியுள்ளது. இவர்கள் 20-க்கும் மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்களில் தங்கி பணிபுரிகின்றனர். 

சிலர் குடும்பத்துடன் வெளியே தங்கி வாழ்கின்றனர். இவர்களை கவனிப்பது, ஒருங்கிணைப்பது மற்றும் இதுபோன்றதொரு தருணத்தில் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருகிறோம். அனைவரையும் வாட்ஸ்-அப் குழு மூலம் ஒருங்கிணைத்து வருகிறோம். அங்கிருந்த வந்த தொழிலாளர்கள் பலரும், நிறுவனங்களில் உள்ள விடுதிகளில் தான் தங்கி உள்ளனர். அவர்களுக்கு உதவி தேவையென்றால் செய்து தருகிறோம். விடுதிகளில் தங்கியிருந்தாலும், அங்கும் சமூக இடைவெளியை பின்பற்ற சொல்கிறோம். 

தேவையின்றி யாரும் வெளியே வர வேண்டாம் எனவும், வாட்ஸ்-அப் குழுவில் தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை நாள்தோறும், அவர்களது தாய்மொழியில் வழங்கி வருகிறோம். ஊரடங்கு காலம் முடியும் வரை நடந்தோ அல்லது வாகனங்களிலோ ஊருக்கு செல்ல முயற்சிக்க வேண்டாம் என தெரிவித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story