தஞ்சையில், 800 டீக்கடைகள் மூடல்; தினமும் ரூ.50 லட்சம் வர்த்தகம் பாதிப்பு 4 ஆயிரம் தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவிப்பு


தஞ்சையில், 800 டீக்கடைகள் மூடல்; தினமும் ரூ.50 லட்சம் வர்த்தகம் பாதிப்பு 4 ஆயிரம் தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவிப்பு
x
தினத்தந்தி 21 April 2020 4:00 AM IST (Updated: 21 April 2020 3:47 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் 800 டீக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தினமும் ரூ.50 லட்சம் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரம் தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள்.

தஞ்சாவூர், 

தஞ்சையில் 800 டீக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தினமும் ரூ.50 லட்சம் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரம் தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள்.

கொரோனா வைரஸ்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் இந்தியாவில் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளது. இந்த உத்தரவு அடுத்த மாதம்(மே) 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைக்காக காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க வருபவர்கள் தவிர மற்றவர்களை போலீசார் விரட்டி விடுகின்றனர். அதையும் மீறி தேவையில்லாமல் வாகனங்களில் வருபவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களது வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

டீக்கடைகள் பாதிப்பு

இந்த ஊரடங்கினால் டீக்கடை நடத்தி வருபவர்கள், அதில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை மாநகரில் மட்டும் டீக்கடைகள் மற்றும் சிறிய உணவகங்கள் 800 கடைகள் உள்ளன. இந்த கடைகள் 3 வகைகளாக உள்ளன. ஒரு வகை டீக்கடைகளில் ஒருவர் அல்லது 2 பேர் வேலை செய்வார்கள். இவர்கள் டீ மட்டும் கடைகளில் போடுவதுடன், பலகாரங்கள் வெளியில் வாங்கி வந்து கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்வார்கள்.

மற்றொரு வகை கடைகளில் 3 பேர் அல்லது 4 பேர் வரை வேலை செய்வார்கள். இந்த கடைகளில் டீ மற்றும் பலகாரங்கள் அந்த கடைகளிலேயே போடப்பட்டு விற்பனை செய்யப்படும். மற்றொரு வகை கடைகளில் டீக்கடையுடன், சிறிய உணவகமும் சேர்த்து நடத்தப்படும். இந்த கடைகளில் 5 பேர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வேலை செய்வார்கள். அதன்படி இந்த 800 கடைகளிலும் 4 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

ரூ.50 லட்சம் வர்த்தகம் பாதிப்பு

இவர்கள் அனைவரும் தினமும் கிடைக்கும் வருவாயை வைத்து சாப்பிடுபவர்கள். ஆனால் கடந்த 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 27 நாட்களாக இவர்கள் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள். இந்த கடைகளின் மூலம் தினமும் ரூ.50 லட்சம் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தஞ்சை மாநகர தேநீர் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜெயபால் கூறியதாவது:-

“டீக்கடை நடத்துவது என்பது சாதாரண விஷயம் இல்லை. காரணம், மாநகரில் டீக்கடை வைத்து இருந்தால் மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும். அதன் பின்னர் உணவு பாதுகாப்புத்துறை, திடக்கழிவு மேலாண்மைத்துறை, தொழிலாளர் நலத்துறை ஆகியவற்றிலும் பதிவு செய்ய வேண்டும். தினமும் நடைபெறும் வர்த்தகத்தின் அடிப்படையில் இவர்களின் வாழ்வாதாரம் இருக்கும்.

நிவாரணம் வேண்டும்

ஆனால் கடந்த 27 நாட்களாக வருமானம் இன்றி அனைத்து தொழிலாளர்களும் நடுரோட்டில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம், டீக்கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பெரும்பாலும் வெளியூர்களை சேர்ந்தவர்களாகத்தான் இருப்பர். எனவே மாநகராட்சி பகுதியில் உள்ள ஒவ்வொரு டீக்கடைகளின் தரத்தினையும் ஆராய்ந்து அதற்கு ஏற்ப அதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story