சேதுபாவாசத்திரத்தில் வெளியூர் மீன் வியாபாரிகளால் கொரோனா பரவும் அபாயம் கட்டுப்பாடுகளை அதிகரிக்க பொதுமக்கள் கோரிக்கை
வெளியூர் மீன் வியாபாரிகளால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதுபாவாசத்திரம்,
வெளியூர் மீன் வியாபாரிகளால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்பிடி தொழில்
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், சின்னமனை, கழுமங்குடா, காரங்குடா, அடைக்கத்தேவன், மந்திரிப்பட்டினம், அண்ணாநகர் புதுத்தெரு, செம்பியன்மாதேவிபட்டினம், கணேசபுரம் உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களில் என்ஜின் பொருத்தப்பட்ட பைபர் படகு, பாரம்பரிய நாட்டுப்படகு என 4,500 நாட்டுப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கொரோனா அச்சம் காரணமாக மீனவர்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். இதையடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அனுமதி வழங்கி அறிவிப்பு வெளியிட்டது.
நிபந்தனைகள்
பிடித்து வரும் மீன்களை ஏலக்கூடங்களில் பொது ஏலம் விடக்கூடாது. வெளியூர் வியாபாரிகளிடம் மீன் விற்பனை செய்யக்கூடாது. காலை 9 மணிக்குள் மீன்களை வியாபாரிகளிடம் விற்பனை செய்துவிட வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளையும் மத்திய அரசு நாட்டுப்படகு மீனவர்களுக்கு விதித்தது.
மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல கலெக்டர் கோவிந்தராவ் அனுமதி வழங்கினார். அதன்படி சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். இந்த நிலையில் நிபந்தனைகளை மீறி வெளியூர் வியாபாரிகள், சேதுபாவாசத்திரம் பகுதிக்கு வந்து மீன்களை வாங்கி செல்வதாக கூறப்படுகிறது.
கட்டுப்பாடுகளை அதிகரிக்க...
சேதுபாவாசத்திரம் அருகே அதிராம்பட்டினம் பகுதியில் 15-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, அங்கு இருந்து வெளியே செல்பவர்களை போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
தேவையில்லாமல் வெளியே செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. ஆனாலும் அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த மீன் வியாபாரிகள் சோதனை சாவடி வழியாக வராமல் குறுக்கு சாலை வழியாக சேதுபாவாசத்திரம் பகுதிக்கு வந்து மீன்கள் வாங்கி செல்வதால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story