பல்பொருள் அங்காடிகளில் பாதிப்பு ஏற்படுத்தும் உணவு பொருட்கள் விற்பதை தடுக்க நடவடிக்கை தேவை
மாவட்டத்தில் பல்பொருள் அங்காடிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் அது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
தமிழக அரசு பல்பொருள் அங்காடிகளில் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் உணவு பொருட்கள் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டால் அதற்கான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
பாக்கெட்டுகளில் உணவு பொருட்கள் தயாரிக்கப்பட்ட தேதி, பயன்படுத்த காலாவதியான தேதி, உணவு பொருளின் எடை உள்ளிட்டவைகள் குறிப்பிடப்பட வேண்டும். மேலும் உணவு பொருட்கள் விற்பனை செய்வதற்கான உரிமத்தையும் விற்பனை மையங்கள் பெற்று இருக்க வேண்டும்.
விருதுநகர் பாண்டியன்நகரில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பாக்கெட் செய்யப்பட்ட கோதுமை மாவு வாங்கி சென்றுள்ளார். இந்த கோதுமை மாவை பயன்படுத்தி உணவு தயாரித்து சாப்பிட்டபோது வீட்டில் சாப்பிட்டவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சந்தேகம் அடைந்த அந்த பெண் கோதுமை மாவு பாக்கெட்டை பார்த்தபோது அதில் மாவு பாக்கெட் செய்யப்பட்ட தேதி 30.8.2020 என்றும், காலாவதி தேதி 30.9.2020 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. பாக்கெட் செய்யப்பட்ட தேதி இன்னும் வரவில்லை. இதனால் கோதுமை மாவு எப்போது தயாரிக்கப்பட்டது என தெரியாத நிலையில் பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் கோதுமை மாவை வாங்கிய பெண், கடைக்கு சென்று பாதிப்பு ஏற்பட்டதை கூறியபோது கடை உரிமையாளர்கள் மாற்றி தர மறுத்ததோடு, வேண்டுமானால் புகார் செய்து கொள்ளுங்கள் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுவிடம் புகார் செய்தபோது அக்குழுவினரும் நடவடிக்கை எடுக்க தயாராக இல்லை என கூறப்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விற்பனையை கண்காணிக்க அதிகாரிகள்அடங்கிய குழுக்கள் அமைத்துள்ள நிலையில் உணவு பொருள் பாதுகாப்பு குறித்த புகாரினை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
மேலும் நோய் தொற்று அபாயம் உள்ள நிலையில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் பாதுகாப்பானதா என உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு கண்காணிப்பு குழுவினருக்கு உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.
Related Tags :
Next Story