ஊரடங்கால், பூட்டிக்கிடக்கும் அச்சகங்கள் வருமானமின்றி தவிக்கும் தொழிலாளர்கள்


ஊரடங்கால், பூட்டிக்கிடக்கும் அச்சகங்கள் வருமானமின்றி தவிக்கும் தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 21 April 2020 4:35 AM IST (Updated: 21 April 2020 4:35 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு எதிரொலியால் அச்சகங்கள் அனைத்தும் பூட்டிக்கிடக்கின்றன. இதனால் வருமானமின்றி அச்சக தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.

திருத்துறைப்பூண்டி,

ஊரடங்கு எதிரொலியால் அச்சகங்கள் அனைத்தும் பூட்டிக்கிடக்கின்றன. இதனால் வருமானமின்றி அச்சக தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.

பூட்டி கிடக்கும் அச்சகங்கள்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களில் ஒன்றாக அச்சகங்களும் உள்ளன. கடந்த 27 நாட்களாக அச்சகங்கள் அனைத்தும் செயல்படாமல் பூட்டிக்கிடக்கன்றன.

திருத்துறைப்பூண்டி பகுதியில் நூற்றுக்கணக்கான அச்சகங்கள் உள்ளன. இதில் அழைப்பிதழ்களை கணினியில் வடிவமைக்க, எந்திரத்தை இயக்க, பைண்டிங் செய்ய என பல்வேறு பணிகளில் எண்ணற்ற தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். திருமணம், காதணி விழா, புதுமனை புகுவிழா, புதிய நிறுவனங்கள் திறப்பு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழ் அடிப்பதன் மூலம் அச்சக தொழிலாளர்களுக்கு நாள்தோறும் வேலை கிடைத்து வந்தது.

கோவில் திருவிழா

அதுவும் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் கோவில் திருவிழா உள்பட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆதலால் மற்ற மாதங்களை விட இந்த மாதத்தில் தான் அச்சக தொழிலாளர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். இந்த நிலையில் ஊரடங்கால், அச்சகங்கள் அனைத்தும் பூட்டிக்கிடப்பதால் தொழிலாளர்கள் வருமானமின்றி அல்லல்பட கூடிய நிலை நிலவுகிறது. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் எளிய முறையில் நடப்பதால் அழைப்பிதழ்கள் அடிக்க யாரும் வருவதில்லை.

வருமானம் இன்றி தவிப்பு

இதுகுறித்து அச்சக உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்க தலைவர் ரவி கூறியதாவது:-

ஊரடங்கால் அச்சக நிறுவனங்கள் எதுவும் இயங்கவில்லை. ஆதலால் இதனை நம்பி வாழ்ந்து கொண்டு இருக்கும் தொழிலாளர்கள் அனைவரும் வருமானமின்றி அல்லல்பட கூடிய அவலநிலை நிலவுகிறது. இந்த நிலையில் அரசு வழங்கிய நிவாரணத்தொகை ரூ.1,000 எங்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே அச்சக தொழிலாளர்களுக்கு கூடுதலாக நிவாரண உதவி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story