கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார்; டெல்லி மாநாடு சென்று வந்தவர் உருக்கமான வேண்டுகோள் - “நமது உயிரை காக்க போராடும் சுகாதாரம், மருத்துவ துறையினருக்கு ஒத்துழைக்க வேண்டும்”
கொரோனா பாதிப்பில் இருந்த மீண்ட டெல்லி மாநாடு சென்று வந்தவர், நமது உயிரை காக்க போராடும் சுகாதாரம் மற்றும் மருத்துவ துறையினருக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மங்களூரு,
கர்நாடக மாநிலம் தட்சிணகன்னடா மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் ஹர்ஷா டுவிட்டரில் ஒரு வீடியோவுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், மங்களூருவில் ஊரடங்கு தொடரும். மங்களூரு மாநகராட்சி சுகாதாரத் துறையினர், கொரோனா தடுப்பு தொடர்பாக வீடு, வீடாக சென்று கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது. அதை மீறி தொல்லை கொடுப்பவர்கள், கட்டாயம் கீழே பதிவிட்டுள்ள வீடியோவை பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
24 மணி நேரமும் கவனித்தனர்
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனா பாதித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பிய ஒருவரின் பேச்சு அடங்கியுள்ளது. அந்த நபர் கூறியிருப்பதாவது:-
மங்களூரு டவுன் தொக்கொட்டு பகுதியை சேர்ந்த நான் டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பினேன். அதன் பிறகு எனக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இதனால் நான் மங்களூரு வென்லாக் அரசு ஆஸ்பத்திரி சிறப்பு வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். அங்கு என்னை டாக்டர்கள், செவிலியர்கள், மருத்து ஊழியர்கள், போலீசார் அருகில் இருந்து 24 மணி நேரமும் நன்றாக கவனித்தனர்.
எனக்கு தேவையானவற்றை அவர்களிடம் கேட்டு பெற்றுக்கொண்டேன். அவர்கள் கூறிய ஆலோசனைகள் படி சிகிச்சைக்கு ஒத்துழைத்தேன். அதனால் தான் நான் விரைவில் குணமடைந்து உள்ளேன். எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறை, மருத்துவ துறை, போலீசார் உள்ளிட்ட யார் மீதும் குறை சொல்லக் கூடாது.
உயிரை காக்க போராடுகிறார்கள்
இந்த வைரஸ் சீனாவில் இருந்து வந்துள்ளது. நம்மை அதிகளவில் பாதித்து வருகிறது. கொரோனா பாதித்து நான் உள்ளே சென்றதும் எனக்கு அனைத்து தேவைகளையும் டாக்டர்கள், செவிலியர்கள் கொடுத்தனர். தங்களது உயிரை துச்சம் என கருதி டாக்டர்கள், செவிலியர்கள் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்து தியாக சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்கள் நம்மை காக்க தான் போராடுகிறார்கள். எனவே கொரோனா பாதித்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுகாதாரத்துறையினர், போலீசார், மருத்துவ துறையினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
சமீபகாலமாக கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்த செல்லும் சுகாதாரத்துறை, ஆஷா திட்ட ஊழியர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர், மருத்துவத்துறை, சுகாதாரத்துறையினருக்கு ஒத்துழைக்க கூறியதற்கு பல்வேறு தரப்பினரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.
Related Tags :
Next Story