பணகுடி அருகே பெண்கள் தலையில் மாட்டும் ‘கிளிப்’பை விழுங்கிய 9 மாத குழந்தை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி டாக்டர்கள் துரிதமாக செயல்பட்டு அகற்றினர்


பணகுடி அருகே பெண்கள் தலையில் மாட்டும் ‘கிளிப்’பை விழுங்கிய 9 மாத குழந்தை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி டாக்டர்கள் துரிதமாக செயல்பட்டு அகற்றினர்
x
தினத்தந்தி 21 April 2020 6:02 AM IST (Updated: 21 April 2020 6:02 AM IST)
t-max-icont-min-icon

பணகுடி அருகே பெண்கள் தலையில் மாட்டும் கிளிப்பை விழுங்கிய 9 மாத குழந்தை மூச்சுவிட முடியாமல் திணறியது. ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி டாக்டர்கள் துரிதமாக செயல்பட்டு கிளிப்பை அகற்றினர்.

நாகர்கோவில், 

பணகுடி அருகே பெண்கள் தலையில் மாட்டும் கிளிப்பை விழுங்கிய 9 மாத குழந்தை மூச்சுவிட முடியாமல் திணறியது. ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி டாக்டர்கள் துரிதமாக செயல்பட்டு கிளிப்பை அகற்றினர்.

மூச்சுவிட திணறல்

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன், விவசாய தொழிலாளி. இவருக்கு வினிஷ்கா என்ற 9 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை நேற்று காலை 7.30 மணி அளவில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது வீட்டின் தரையில் கிடந்த, பெண்கள் தலையில் மாட்டும் கிளிப்பை எடுத்து விழுங்கியதாக தெரிகிறது. கூர்மையான அந்த கிளிப் குழந்தையின் தொண்டைப்பகுதியில் சிக்கிக்கொண்டது. இதனால் அந்த குழந்தைக்கு கடுமையான வலி ஏற்பட்டது. மேலும் மூச்சு விடவும் திணறியது.

தொண்டையில் கிளிப்

அந்த குழந்தை அழுது அலறி துடித்தது. குழந்தையின் தாயார் ஓடிவந்து குழந்தையை பூச்சி எதுவும் கடித்துவிட்டதோ என்று பார்த்தார். பூச்சி கடித்ததற்கான அடையாளமோ, அருகில் பூச்சியோ எதுவும் இல்லை. ஆனாலும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. இதனால் பதறிப்போன நதியா, குழந்தை எதையாவது விழுங்கி விட்டதா? என வாயைத் திறந்து பார்த்தார். அப்போது தொண்டையில் தலைக்கு மாட்டும் கிளிப் சிக்கியவாறு இருந்தது.

இதனால் பதறிப்போன அவர் தன்னுடைய கணவரை அழைத்துக்கொண்டு பணகுடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர், கிளிப்பை அகற்றுவதற்கு போதிய வசதி இல்லை. எனவே வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

மயங்கும் நிலையில்...

உடனே அவர்கள் அருகில் இருந்த ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு குழந்தையை அழைத்து சென்றனர். அங்கிருந்த டாக்டர்களும், குழந்தையின் தொண்டையில் சிக்கி இருந்த கிளிப்பை இங்கு அகற்ற முடியாது. எனவே நாகர்கோவில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுங்கள் என்றனர்.

ஆனால் நாகர்கோவிலுக்கு குழந்தையை அழைத்துச்செல்ல அங்குள்ள கார் டிரைவர்களை அணுகியபோது, ஊரடங்கின் காரணமாக அனுமதி கடிதம் இல்லாமல் நாகர்கோவிலுக்கு வரமுடியாது என்று கூறியதாக தெரிகிறது. அதே நேரத்தில் அந்த பச்சிளங்குழந்தை அழுது, அழுது மயங்கும் நிலையில் இருந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

ஆசாரிபள்ளத்தில் ஏற்பாடு

இதையடுத்து அந்த குழந்தையை பெற்றோர் இருசக்கர வாகனம் மூலமாக நாகர்கோவில் வெள்ளமடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து டாக்டர்கள் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லும்படி கூறி, ஆம்புலன்சுக்கு ஏற்பாடு செய்தனர்.

ஆம்புலன்ஸ் மூலம் அந்த குழந்தை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு சிறிது மயக்கமடைந்த நிலையில் கொண்டு செல்லப்பட்டது. தகவல் அறிந்த ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி, ஆஸ்பத்திரி சூப்பிரண்டு அருள்பிரகாஷ் ஆகியோர் காது, மூக்கு தொண்டை நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்து, குழந்தையின் தொண்டையில் சிக்கியுள்ள கிளிப்பை அகற்றுமாறு கூறி ஆலோசனை வழங்கினர்.

லாவகமாக அகற்றினர்

இதையடுத்து அந்த குழந்தைக்கு காது, மூக்கு, தொண்டை மருத்துவத்துறை தலைவர் சைரஸ் தலைமையில் டாக்டர்கள் மதன்ராஜ், ஞானவேல் மயக்கவியல் டாக்டர்கள் எட்வர்டு, முத்துசெண்பகம், பிரதீமா உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் குழந்தைக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்து தொண்டையில் சிக்கிய கிளிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மிகவும் சிக்கலான நிலையில் கிளிப் தொண்டையில் சிக்கி இருந்ததால் அகற்றும்போது தொண்டைக்கு கீழே சென்றாலும் பிரச்சினை, மூச்சுக்குழாயை அடைத்தாலும் கிளிப்பை அகற்ற சிரமப்பட வேண்டி இருந்தது. பின்னர் சுமார் ஒரு மணி நேரத்துக்குப்பிறகு குழந்தையின் தொண்டையில் சிக்கிய கிளிப் எண்டோஸ்கோப்பி மூலம் லாவகமாக அகற்றப்பட்டது.

பாராட்டு

தற்போது குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை நலமாக உள்ளது. இதனை அறிந்த பிறகே குழந்தையின் பெற்றோர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். குழந்தையை காப்பாற்றிய டாக்டர்களுக்கு அவர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களாக கொரோனா நோயாளிகள், கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்கள் ஆகியோருக்கு சிகிச்சை அளிப்பதிலும், உரிய பரிசோதனைகளை மேற்கொள்வதிலும் டாக்டர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று கிளிப்பை விழுங்கிய நிலையில் ஆஸ்பத்திரிக்கு வந்த 9 மாத குழந்தைக்கு விரைவாக சிகிச்சை அளித்து, கிளிப்பை அகற்றி உயிரை காப்பாற்றிய டாக்டர்களை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

Next Story