குமரியில் 26 நாட்களுக்கு பிறகு பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறப்பு 11 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன


குமரியில் 26 நாட்களுக்கு பிறகு பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறப்பு 11 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன
x
தினத்தந்தி 21 April 2020 6:28 AM IST (Updated: 21 April 2020 6:28 AM IST)
t-max-icont-min-icon

26 நாட்களுக்கு பிறகு நேற்று குமரியில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறக்கப்பட்டன. 11 பத்திர ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன.

நாகர்கோவில், 

26 நாட்களுக்கு பிறகு நேற்று குமரியில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறக்கப்பட்டன. 11 பத்திர ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன.

26 நாட்களுக்கு பிறகு...

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பெரும்பாலான அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளக்கூடிய துறை அலுவலகங்கள் மட்டுமே செயல்படுகிறது. மூடப்பட்ட அலுவலகங்களில் பத்திரப்பதிவு அலுவலகமும் ஒன்றாகும். இந்த நிலையில் 26 நாட்களுக்கு பிறகு தமிழக அரசு உத்தரவுபடி நேற்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறக்கப்பட்டன. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள 12 பத்திரப்பதிவு அலுவலகங்களும் திறக்கப்பட்டன. ஆனால் பஸ் போக்குவரத்து இல்லாததால் மிக குறைந்த அளவிலான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளே பணிக்கு வந்திருந்தனர்.

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பதிவு அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 33 பேர் பணியாற்றி வருகிறார்கள். ஆனால் மாவட்ட பதிவாளர் சங்கரநாராயணன், பத்திரப் பதிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என 7 பேர் மட்டுமே வந்திருந்தனர். அவர்கள் முகக்கவசம், கையுறை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

பத்திர பதிவு குறைவு

பத்திரம் பதிவு செய்ய வருபவர்களுக்காக அலுவலகத்தின் வெளியே தண்ணீர் மற்றும் கை கழுவும் திரவம் வைக்கப்பட்டு இருந்தது. எனினும் நாகர்கோவில், வடசேரி அலுவலகங்களுக்கு பத்திர பதிவுக்காக யாரும் வரவில்லை. இதேபோல் மாவட்டம் முழுவதும் குறைவான ஊழியர்களே வருகை தந்தனர். பத்திரப்பதிவும் குறைவாகவே நடந்திருந்தது.

22 பேர் வந்தனர்

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 12 பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் காலியிடங்கள் தவிர 72 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் மாவட்ட பதிவாளர் உள்பட 22 பேர் மட்டும் பணிக்கு வந்தனர்.

நாகர்கோவில், வடசேரி பத்திர பதிவு அலுவலகங்களில் ஒரு ஆவணமும் பதிவு செய்யப்படவில்லை. தோவாளையில் 3-ம், குளச்சலில் ஒன்றும், இரணியலில் 3-ம், கொட்டாரத்தில் 4-ம் ஆக மொத்தம் 11 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான ஊழியர்கள் மதுரை, சேலம், கள்ளக்குறிச்சி, நாங்குநேரி உள்ளிட்ட வெளி மாவட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

பஸ் போக்குவரத்து இல்லாததால் அவர்களால் பணிக்கு வர முடியவில்லை. குமரி மாவட்டத்தின் தொலைதூரங்களில் உள்ளவர்களும் பணிக்கு வரவில்லை என்றனர்.

Next Story