கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 1,150 பணியாளர்களுக்கு தலா 30 முட்டைகள் வினியோகம்


கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 1,150 பணியாளர்களுக்கு தலா 30 முட்டைகள் வினியோகம்
x
தினத்தந்தி 21 April 2020 6:48 AM IST (Updated: 21 April 2020 6:48 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் 1,150 கொசு ஒழிப்பு மற்றும் தூய்மை பணியாளர்களின் உடல் நலனை பாதுகாக்க தலா 30 முட்டைகள் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் 1,150 கொசு ஒழிப்பு மற்றும் தூய்மை பணியாளர்களின் உடல் நலனை பாதுகாக்க தலா 30 முட்டைகள் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.

அரசு உத்தரவு

கொரோனா தடுப்பு நடவடிக்கையால் குமரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் சாலை ஓரங்களில் தங்கியிருக்கும் பிச்சைக்காரர்களுக்கும், ஏழை எளியோருக்கும் உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டது.

இதையறிந்த தமிழக அரசு உள்ளாட்சிகள் சார்பிலும், அரசு துறைகள் சார்பிலும் அவர்களுக்கு உணவு சமைத்து வழங்க உத்தரவிட்டது.

அதன்படி நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் அம்மா உணவகம், திருமண மண்டபம் மூலமாக நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பேருக்கு 3 வேளையும் உணவு பொட்டலங்கள் வழங்கி வருகிறது.

இந்த நிலையில் மதிய நேரத்தில் வழங்கப்படும் கலவை சாதம், வெஜிடபிள் பிரியாணி ஆகியவற்றுடன் முட்டையையும் சேர்த்து வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக நாமக்கல்லில் இருந்து 1 லட்சம் முட்டைகளை நாகர்கோவிலுக்கு மாநகராட்சி நிர்வாகம் வரவழைத்துள்ளது.

அந்த முட்டைகள் மதிய உணவுடன் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நோயாளிகள் வசித்த பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கும் வீட்டுக்கு தலா 10 முட்டைகள் வீதம் வழங்கப்படுகிறது.

தூய்மை பணியாளர்களுக்கு...

மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தூய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் கொரோனா பரவலை தடுக்க கிருமி நாசினி தெளிக்கும் பணி, தடை செய்யப்பட்ட பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணி மற்றும் இருமல், சளி, காய்ச்சல் பற்றிய கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவர்களுடைய உடல் நலத்தை பேணவும், அவர்கள் சத்தான உணவை உண்ணும் வகையிலும் ஒவ்வொரு தூய்மை பணியாளர் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளருக்கும் தலா 30 முட்டைகள் வீதம் வழங்க மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உத்தரவிட்டார்.

அதன்படி 1,150 தூய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு தலா 30 முட்டைகள் வீதம் 34 ஆயிரத்து 500 முட்டைகள் வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது.

Next Story