திருச்சியில் பரபரப்பு சம்பவம்: அரிசி மூட்டைகள் ஏற்றி சென்ற லாரி டிரைவர் திடீர் சாவு மோதிய வேகத்தில் சரக்கு வாகனம், கடைகள் சேதம்


திருச்சியில் பரபரப்பு சம்பவம்: அரிசி மூட்டைகள் ஏற்றி சென்ற லாரி டிரைவர் திடீர் சாவு மோதிய வேகத்தில் சரக்கு வாகனம், கடைகள் சேதம்
x
தினத்தந்தி 21 April 2020 7:50 AM IST (Updated: 21 April 2020 7:50 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் அரிசி மூட்டைகள் ஏற்றி சென்ற லாரி டிரைவர் திடீரென இறந்தார். லாரி மோதிய வேகத்தில் சரக்கு வாகனம், கடைகள் சேதம் அடைந்தன.

திருச்சி, 

திருச்சியில் அரிசி மூட்டைகள் ஏற்றி சென்ற லாரி டிரைவர் திடீரென இறந்தார். லாரி மோதிய வேகத்தில் சரக்கு வாகனம், கடைகள் சேதம் அடைந்தன.

போக்குவரத்து நிறுத்தம்

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் சாலைகளில் வாகன போக்குவரத்து இல்லை. ஆனால், அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் பால் மற்றும் காய்கறி வாகனங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்யும் லாரிகளும் சென்று கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில் திருச்சி கே.கே.நகர் பகுதி காந்தி நகரில் உள்ள மத்திய தானிய கிடங்கில் இருந்து பொது வினியோக திட்டத்திற்கான சுமார் 25 டன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி பெரம்பலூர் மாவட்டம் குன்னத்திற்கு புறப்பட்டது. லாரியை அரியலூர் மாவட்டம் தவுசாய்குளத்தை சேர்ந்த இளங்கோவன் (வயது 45) ஓட்டினார்.

திடீர் சாவு

அந்த லாரி திருச்சி காஜாமலை மெயின்சாலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் சென்று கொண்டிருந்த போது, டிரைவர் இளங்கோவனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் நிலைதடுமாறிய இளங்கோவன் லாரியை நிறுத்துவதற்காக இடது புறம் ஓரம் கட்ட முயன்றார்.

ஆனால் அவரால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் லாரி சாலை ஓரம் நின்று கொண்டிருந்த ஒரு சரக்கு வாகனத்தின் மீது மோதி தள்ளியது. பின்னர் அந்த வாகனத்தையும் தள்ளிக்கொண்டே சென்று ஒரு கடையின் மீது மோதி நின்றது. இதில், இருக்கையில் அமர்ந்தபடியே இளங்கோவன் உயிரிழந்தார். பட்டப்பகலில் லாரியும், சரக்கு வாகனமும் மோதி கடைக்குள் புகுந்தது மற்றும் டிரைவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் லாரி டிரைவர் இளங்கோவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

2 கடைகள் சேதம்

லாரி மோதியதில் சரக்கு வாகனமும், 2 கடைகளும் சேதம் அடைந்தன. லாரி மோதியபோது சரக்கு வாகனத்தில் அதன் டிரைவர் இல்லாததாலும், ஊரடங்கினால் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததாலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story