பெரம்பலூருக்கு திரும்ப முடியாததால் தனியார் நிறுவன ஊழியர் துபாயில் தற்கொலை உடலை மீட்டு கொண்டு வர மனைவி மனு
விடுமுறை கிடைத்தும் விமான போக்குவரத்து இல்லாததால் பெரம்பலூர் திரும்ப முடியாமல் துபாயில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர்,
விடுமுறை கிடைத்தும் விமான போக்குவரத்து இல்லாததால் பெரம்பலூர் திரும்ப முடியாமல் துபாயில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்டு கொண்டுவர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனைவி மனு கொடுத்துள்ளார்.
உடல் நலக்குறைவு
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா பேரளி அருந்ததியர் நகரை சேர்ந்தவர் மதுரைவீரன் (வயது 51). இவர் கடந்த 18 ஆண்டுகளாக துபாயில் அலைன் நகரில் தங்கியிருந்து ஒரு தனியார் நிறுவனத்தில் வயரிங் எலக்ட்ரீசியன் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். மேலும் மதுரைவீரன் துபாயில் இருந்து கடந்த 2018-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு வந்து விட்டு, மீண்டும் துபாய் சென்றார்.
தற்போது உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மதுரைவீரனுக்கு சொந்த ஊருக்கு செல்வதற்கு விடுமுறை கிடைத்துள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால், அவர் சொந்த ஊருக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
தற்கொலை
இதனால் மனமுடைந்த மதுரைவீரன் தங்கியிருந்த தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, துபாயில் இருந்து பேரளியில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு நேற்று காலை தகவல் வந்துள்ளது. இதையடுத்து மதுரைவீரனின் மனைவி லெட்சுமி தனது உறவினர்களுடன் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜராஜனிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், வெளிநாட்டில் இறந்த எனது கணவரின் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இறந்த மதுரைவீரனுக்கு மகேந்திரன் என்கிற மகனும், மகேஸ்வரி என்கிற மகளும் உள்ளனர். இதில் மகேஸ்வரிக்கு திருமணமாகிவிட்டது.
Related Tags :
Next Story