நோய்தொற்று பரவும் அபாயம்: பயன்படுத்திய முகக்கவசம், கையுறைகளை சாலையில் வீசி எறியாதீர்கள் - பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள்
நோய்தொற்று பரவும் அபாயம் இருப்பதால் பயன்படுத்திய முகக்கவசம், கையுறைகளைகளை சாலையில் வீசி எறியாதீர்கள் என்று பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
கோவை,
சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை மிகவும் அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரசானது இந்தியாவையும் தாக்கி வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன. இதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் இந்த நோய் தொற்று பரவுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஊரடங்கையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், தேவையின்றி வெளியே வருபவர்களின் நடமாட்டத்தை தடுத்துநிறுத்துவது போலீசாருக்கு பெரும்சவாலாக உள்ளது.
பல இடங்களில் கடைகள், மார்க்கெட்டுகளுக்கு செல்பவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடந்து கொள்கிறார்கள். பலர் முகக்கவசம் அணியாமலும் வெளியே வாகனங்களில் ஊர்சுற்றுவதை காணமுடிகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.
இதனால் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசங்களை வாங்கி அணிந்து வருகின்றனர். இதில் ஒருமுறை பயன்படுத்தும் முகக்கவசங்கள், துவைத்து மீண்டும் பயன்படுத்தும் முகக்கவசங்கள், டாக்டர்கள் பயன்படுத்தும் பல அடுக்க முகக்கவசங்கள் என பல்வேறு வகையில் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. சிலர் ஒரு முறை பயன்படுத்தப்படும் கையுறைகளை அணிந்து கொண்டு கடைகளுக்கு செல்கிறார்கள்.
அவ்வாறு பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்திய முகக்கவசம் மற்றும் கையுறைகளை பொதுமக்களில் பலர் சாலைகளில் வீசி எறிந்துவிட்டு செல்கிறார்கள்.
இதனால் சாலையோரம் மேயும் ஆடு, மாடுகள் மற்றும் நாய்கள், மலையடிவாரப் பகுதியில் வசிக்கும் குரங்குகள் அவற்றை நுகர்ந்துபார்க் கும். அதில் இருந்து விலங்குகளுக்கு தொற்று நோய் பரவும். அதன் மூலம் மனிதர்களுக்கும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
பொதுமக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் வீடுகளிலேயே இருக்க வேண்டும். அவசியமின்றி வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். இதன் மூலமே கொரோனா என்ற கொடூர நோய் தொற்று பரவலை தவிர்க்க முடியும். கொரோனா பரவலை தவிர்க்கும் விதமாக முகக்கவசம், கையுறைகளை அணியும் பொதுமக்கள் அவற்றை சாலைகளில் வீசி எறிய வேண்டாம். அவ்வாறு செய்தால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படும். ஒருமுறை பயன்படுத்தும் முகக்கவசம், கையுறைகளை அணியும் பொதுமக்கள் அதை பயன்படுத்திவிட்டு பாதுகாப்பான முறையில் குப்பைத்தொட்டியில் போடலாம்.
முகக்கவசம் அணிந்து இருக்கும் தைரியத்தில் பொதுமக்கள், பிறருடன் இருக்கும் இடைவெளியை மறந்துவிடக்கூடாது. உரிய இடைவெளிவிட்டு நிற்கவேண்டும்.
அத்துடன் பொதுமக்கள் கைகளை சோப்பு போட்டோ அல்லது கிருமிநாசினி கொண்டோ அடிக்கடி கழுவவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story