ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு, 780 ரேபிட் கிட் கருவிகள் வந்தன - கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்


ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு, 780 ரேபிட் கிட் கருவிகள் வந்தன - கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்
x
தினத்தந்தி 21 April 2020 6:29 AM GMT (Updated: 21 April 2020 6:29 AM GMT)

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு 780 ரேபிட் கிட் கருவிகள் வந்துள்ளதாக கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்தார். இதுகுறித்து கலெக்டர் திவ்யதர்ஷினி நிருபர்களிடம் கூறியதாவது:-

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 102-ஆக குறைந்துள்ளது. நேற்று 34 பேர் வீடுகளில் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்படுதலை நிறைவு செய்துள்ளனர். டெல்லி சென்று வந்தவர்களில் கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்களுடனும் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீசார், தன்னார்வலர்கள் மற்றும் கட்டுப்பாட்டு பகுதிகளில் பணியில் உள்ளவர்கள் என 148 பேருக்கு ரேபிட் கிட் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. குறிப்பாக, இந்தக் கருவி மூலம் முதன்மையாக பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பணியில் உள்ள போலீசார், தன்னார்வலர், வருவாய்த் துறையினர் ஆகியோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது வரை மொத்தம் 38 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 33 பேர் வேலூர் அரசு மருத்துவமனையிலும், 5 பேர் வேலூர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 33 பேரில் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் 16 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்புள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை. ஆனால் நோய் பாதிப்பை உணர்ந்து மக்களே அதனை கடைப்பிடித்து வருகின்றனர். மாவட்டத்தில் 1,200 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் நேற்று வரை பொதுமக்கள் 72 பேருக்கு பரிசோதனை செய்ததில் 46 பேருக்கு பாதிப்பு இல்லை என முடிவுக்கு வந்துள்ளது. மீதமுள்ளவர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு விதிமுறைகள் அப்படியே பின்பற்றப்படும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள அத்தியாவசியப் பணிகளுக்கு எந்தவித மாற்றமும் இல்லை. ஜெர்மனி நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் பாதிப்பு அதிகமாக இருப்பதால் கல்லறைகள் கட்டுவதற்காக ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட கற்களை பயன்படுத்துவதற்கான கற்கள் ஏற்றுமதி ஒரு நிறுவனத்தின் மூலம் அனுப்பப்பட்டு விட்டது. புதிதாக குவாரிகளில் கற்கள் உற்பத்தி ஏதும் நடைபெறவில்லை.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14 நாட்கள் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றால் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு நிற மண்டலத்துக்கு மாறிவிடும், 28 நாட்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டால் பச்சை நிற மண்டலத்துக்கு ராணிப்பேட்டை மாவட்டம் மாறிவிடும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் இன்று வரை 780 ரேபிட் கிட் கருவிகள் வந்துள்ளது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Next Story