ஊட்டியில், அடுத்த சாகுபடிக்கு தயாராகும் காய்கறி விவசாயிகள்


ஊட்டியில், அடுத்த சாகுபடிக்கு தயாராகும் காய்கறி விவசாயிகள்
x
தினத்தந்தி 21 April 2020 12:49 PM IST (Updated: 21 April 2020 12:49 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் காய்கறி விவசாயிகள் அடுத்த சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர்.

ஊட்டி,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. நீலகிரியில் கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, பீன்ஸ் போன்ற காய்கறிகள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. தற்போது ஏல மண்டிகள் மூடப்பட்டு உள்ளதால், வெளியிடங்களுக்கு காய்கறிகள் குறைந்த அளவே செல்கின்றன. விவசாய பணிகளை மேற்கொள்ளலாம் மற்றும் விளைபொருட்களை வாகனங்களில் கொண்டு செல்ல அனுமதி பெற தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. இருந்தாலும், சிறு, குறு விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த காய்கறிகளை கிராமப்புறங்களில் இருந்து நகருக்கு கொண்டு வர முடியாமல் உள்ளனர். மேலும் காய்கறிகளுக்கு போதுமான விலை கிடைக்காததால் அறுவடை செய்யாமலும், வீணாக கொட்டியும் வருகின்றனர்.

இதற்கிடையில் சில விவசாயிகள் குறைந்த விலைக்கு விற்று விட்டு, அடுத்த காய்கறிசாகுபடிக்கு தயாராகி வருகிறார்கள். ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் 7 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த கேரட்டுகள் சமீபத்தில் அறுவடை செய்யப்பட்டது. கட்டுப்படியாகாத விலை என்றாலும், விற்பனை செய்து விட்டு விவசாயிகள் அடுத்த நடவு பணியை தொடங்கி உள்ளனர். நிலத்தை நன்றாக உழுது தயார் செய்து பாத்திகளை போட்டனர். தொழிலாளர்கள் சமூக இடைவெளி விட்டு முகக்கவசம் அணிந்து பூண்டுகளை நடவு செய்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ஊரடங்கு உத்தரவால் மார்ச் மாத இறுதி மற்றும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் கட்டுப்பாடுகளால் விளைபொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் விளைந்த கேரட்டுகளை அறுவடை செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்தோம். தற்போது பூண்டு கிலோ ரூ.150 முதல் ரூ.180 வரை விற்பனை ஆவதால், பூண்டுகளை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளோம். ஊரடங்கு விரைவில் முடிந்து காய்கறிகளை வெளியிடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்தால் தான் லாபம் கிடைக்கும். தற்போது லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஊரடங்கு எப்போது முடியும், கட்டுப்பாடுகள் எப்போது தளர்த்தப்படும் என்று எதிர்பார்த்து உள்ளோம். பகலில் வெயில் அதிகமாக அடிப்பதால், பயிர்கள் வாடாமல் இருக்க காலை, மாலை வேளைகளில் ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story