கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்: தென்காசி நகருக்கு ‘சீல்’ வைப்பு - வெளி ஆட்கள் உள்ளே நுழைய தடை
கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதால் தென்காசி நகருக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது. வெளி ஆட்கள் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தென்காசி,
தென்காசி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை 31 பேர் கொரோனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 28 பேர் புளியங்குடியை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் உத்தரவின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் ஆலோசனையின்படி தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை முழுமையாக அமல்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
அத்தியாவசிய தேவை இன்றி சாலைகளில் சுற்றுத்திரிபவர்களை பிடித்து விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்கின்றனர். காலையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருபவர்களை சமூக இடைவெளியில் நின்று பொருட்கள் வாங்க அறிவுறுத்தி வருகிறார்கள்.
முககவசம்
மேலும், முககவசம் அணிய வேண்டும், வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று ஆங்காங்கே ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. எவ்வளவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் பொதுமக்கள் சாலைக்கு வருவது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இது பொதுமக்களின் நலனுக்கு தீங்கு விளைவிப்பது ஆகும். மேலும் புளியங்குடியில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
‘சீல்’ வைப்பு
இந்த நிலையில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, மேலும் இந்த வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்த தென்காசி நகருக்கு போலீசார் நேற்று ‘சீல்‘ வைத்தனர். நெல்லை மற்றும் அம்பையில் இருந்து தென்காசி வரும் சாலை சந்திப்பு பகுதியான ஆசாத் நகர் பகுதி, பழைய குற்றாலத்தில் இருந்து குற்றாலம் வரும் வழியில் ஆயிரப்பேரி விலக்கு, குத்துக்கல்வலசை, யானை பாலம், கீழப்புலியூர் போன்ற அனைத்து பகுதிகளும் ‘சீல்‘ வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
வெளியூர்களில் இருந்து தென்காசிக்கு அத்தியாவசிய தேவைகளான பால், காய்கறி, மளிகை பொருட்கள், மருந்து, தினசரி நாளிதழ்கள் போன்றவை வரும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். பிற வாகனங்கள் உள்ளே நுழைய தடை செய்யப்பட்டு உள்ளது.
உள்ளே நுழைய தடை
மாவட்ட கலெக்டர் பாஸ் இருந்தால் அந்த வாகனங்கள் அனுமதிக்கப்படும். அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் போன்றவர்கள் தங்களது அடையாள அட்டையுடன் வர வேண்டும். வெளி ஆட்கள் அத்தியாவசிய தேவைகள் இன்றி உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தடுப்புகள் கொண்டு சாலையை மூடிய போலீசார் தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்களை அனுமதிக்கின்றனர்.
Related Tags :
Next Story