கோவில்பட்டியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்


கோவில்பட்டியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
x
தினத்தந்தி 22 April 2020 4:30 AM IST (Updated: 21 April 2020 10:48 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

கோவில்பட்டி, 

கொரோனா தடுப்பு நடவடிக்கையால் விலையேற்றத்தை தவிர்க்கும் வகையில், ரேஷன் கடைகளில் 19 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரூ.500-க்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கோவில்பட்டி இனாம் மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடையில் தமிழக அரசின் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு நேற்று வழங்கப்பட்டது.

மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். அமைச்சர் கடம்பூர் ராஜூ ரேஷன்கார்டுதாரர்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை வழங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர், சைல்டு லைன் திட்டம் சார்பில், 65 குடும்பங்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் பாண்டவர்மங்கலத்தில் மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் அன்புராஜ் ஏற்பாட்டில், 220 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு லாரி அதிபர் மாரிச்சாமி ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் வழங்கினார்.

பின்னர் கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 27 பேரில் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கடந்த ஒரு வாரத்தில் பசுவந்தனையைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர் வடமாநிலங்களில் உள்ள புனித தலங்களுக்கு சென்று வந்தவர். அவருடன் தொடர்பில் இருந்த 93 பேருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. மேலும் சிலருக்கு ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை. தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு உரிய விதிமுறைகளின்படி, சமூக இடைவெளியை கடைபிடித்து இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்வதற்கு 600 ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன. சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை ரத்து செய்வது குறித்து முதல்-அமைச்சர், மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்து சென்று வலியுறுத்துவார். இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, சின்னப்பன் எம்.எல்.ஏ., தாசில்தார் மணிகண்டன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, கோவில்பட்டி நகரசபை ஆணையாளர் ராஜாராம், யூனியன் தலைவி கஸ்தூரி, யூனியன் ஆணையாளர்கள் மாணிக்கவாசகம், வசந்தா, மருத்துவ பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அனிதா, குடிநீர் வடிகால்வாரிய செயற்பொறியாளர் செந்தூர் பாண்டியன்,

கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ரவிச்சந்திரன், துணை பதிவாளர் ஜெயசீலன், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் சுரேஷ், துணை தலைவர் ராஜூ, நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் பரமசிவம், செயலாளர் சேதுரத்தினம், துணை தலைவர் கோபால்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story