நாமக்கல்லில் இருந்து ஈரோட்டுக்கு காரில் மது கடத்திய அ.ம.மு.க. பிரமுகர் உள்பட 2 பேர் கைது
நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ஈரோட்டுக்கு காரில் மது கடத்திய அ.ம.மு.க. பிரமுகர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 336 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பவானி,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கடந்த ஒரு மாதமாக டாஸ்மாக் கடைகள் செயல்படவில்லை. பல்வேறு இடங்க ளில் மது கடத்தல், கள்ளச்சாராயம் விற்பனை பெருகி வருகின்றன. இதைத்தடுக்க போலீசார் ரோந்து பணியையும், வாகன சோதனையையும் தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலை யில் ஈரோடு மாவட்டம் பவானி லட்சுமிநகரில் உள்ள ஈரோடு-நாமக்கல் மாவட்ட எல்லையின் சோதனை சாவடியில் நேற்று அதிகாலை கோபி மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் சித்தோடு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது காரின் முன்பு, அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது என்று ஒட்டப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து காரின் பின்பகுதியில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது காய்கறிகள் இருந்தன. அந்த காய்கறிகளை அப்புறப்படுத்தி பார்த்தபோது அதில் மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து காரை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிங்கலாந்தபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 21) என்பதும், காரின் உரிமையாளரான ஈரோடு குமலன்குட்டை பகுதியை சேர்ந்த முருகன் (40) என்பவர் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ஈரோட்டுக்கு மதுவை கடத்தி வர சொல்லி இருந்ததும் தெரியவந்தது. இதில் முருகன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் பகுதி செயலாளராக உள்ளார். இதையடுத்து விக்னேஷ், முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 336 மதுபாட்டில்களையும், மதுவை கடத்த பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் குமாரபாளையத்தில் இருந்து ஈரோட்டுக்கு சாராயம் கடத்தி வந்ததாக ஈரோடு சூரம்பட்டி வலசை சேர்ந்த மாரியப்பன் (37) என்பவரையும் போலீசார் லட்சுமிநகர் சோதனை சாவடியில் வைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 சாராய பாட்டில்களையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story