நெல்லையில் கடைகளில் திடீர் சோதனை: 100 கிலோ பேரீச்சம் பழம் பறிமுதல்
நெல்லையில் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வண்டுகள் காணப்பட்ட 100 கிலோ பேரீச்சம் பழம் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை,
நெல்லையில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் குறிப்பிட்ட நிறுவன தயாரிப்பு பேரீச்சம் பழங்களில் வண்டு காணப்படுவதாக கலெக்டர் ஷில்பாவுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அவரது உத்தரவுப்படி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் மற்றும் அலுவலர்கள் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர்.
நெல்லை டவுனில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடையில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு பிரபல நிறுவனத்தின் பேரீச்சம் பழ பாக்கெட்டுகளை பிரித்து ஆய்வு செய்தனர். அப்போது அதன் உள்ளே வண்டுகள் காணப்பட்டது.
இதையடுத்து அங்கிருந்து 75 கிலோ பேரீச்சம் பழம் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அதிலிருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
இதேபோல் வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள மார்க்கெட் கடையிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு 25 கிலோ பேரீச்சம் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பயன்பாட்டுக்கு உரிய தேதி இருந்தபோதிலும், வண்டு அரித்து சாப்பிட முடியாத மோசமான நிலையில் பேரீச்சம் பழம் காணப்பட்டது. இதையடுத்து உடனடியாக மாதிரி சேகரிக்கப்பட்டு, மற்றவை அழிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரி ஜெகதீஷ் சந்திரபோஸ் கூறுகையில், “வண்டுகள் காணப்பட்ட 65 கிலோ பேரீச்சம் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதன் மாதிரி பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பகுப்பாய்வு முடிவு கிடைத்த உடன் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும்போது அதில் உள்ள தயாரிப்பு தேதி, பயன்படுத்தும் கால அளவு ஆகியவற்றை பார்க்க வேண்டும். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால், ஆர்டரின் பேரில் பொருட்கள் வீட்டுக்கு வரும்போது, பில்படி சரியாக உள்ளதா? என்று பார்ப்பதுடன் தரமானதாக உள்ளதா? பயன்படுத்தும் இறுதி தேதி சரியாக உள்ளதா? என்பதை பார்த்து வாங்க வேண்டும்“ என்றார்.
இதேபோல் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராமசுப்பிரமணியன், சங்கரலிங்கம் ஆகியோர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள புரோட்டா கடைகளில் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு உணவு பொதிந்து கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 3 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் உணவு தயாரிப்பில் ஈடுபடுகிறவர்கள் முக கவசம் அணிந்து பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story