திருமுருகன்பூண்டி அருகே, கூடுதல் நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு


திருமுருகன்பூண்டி அருகே, கூடுதல் நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 April 2020 4:15 AM IST (Updated: 22 April 2020 1:09 AM IST)
t-max-icont-min-icon

திருமுருகன்பூண்டி அருகே கூடுதல் நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அனுப்பர்பாளையம், 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மேலும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள் உணவுக்கு கூட வழியின்றி தவித்து வருகின்றனர். ஏழை மக்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு வகைகளில் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமில்லை என்றும், கூடுதலாக நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என்றும் கூறி திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த அணைபுதூரை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை அவினாசி திருப்பூர் ரோட்டில் திடீரென திரண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த அவினாசி வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியம்மாள், முன்னாள் கவுன்சிலர் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி சாப்பிடக்கூட முடியாத அளவுக்கு தரமற்றதாக இருப்பதாகவும், அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் போதுமான அளவில் இல்லாததால் கூடுதலாக வழங்க வேண்டும் என்றும் முறையிட்டனர்.

இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் தொடர்பான விவரங்களை சேகரித்து இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதன் பின்னரே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story